முந்திய அரசாங்கம்போல் அல்லாமல் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் எந்கக் கட்சி ஆட்சி நடக்கிறது என்று பாராமல் எல்லா மாநிலங்களுக்கும் நியாயமான முறையில் நிதி ஒதுக்கீடு செய்யும் எனத் துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார்.
உதாரணத்துக்கு பாஸ் ஆட்சியில் உள்ள திரெங்கானு கூட்டரசு துறைகளின் மூலமாக அல்லாமல் நேரடியாகவே எண்ணெய் உரிமப் பணத்தைப் பெறும்.
“பிரதமர் நியாயமான முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். பணக்கார மாநிலங்கள் சமாளித்துக்கொள்ளும், வசதிக்குறைந்த மாநிலங்களுக்குத்தான் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
“திரெங்கானு வேறொரு கட்சியால் ஆளப்படுகிறது என்றாலும் கூட்டரசு அரசாங்கம் அதற்குரிய எண்ணெய் உரிமப் பணத்தை அந்த மாநில அரசிடமே கொடுக்கும்.
“அவர்கள் மக்களுக்குக்காகவே பணத்தைச் செலவிட வேண்டும், மக்கள் கட்சிக்காரர்களா என்றெல்லாம் பார்க்கக் கூடாது”, என்றார்.
துணைப்பிரதமருடனான கூட்டத்துக்கு திரெங்கானு மந்திரி புசார் அஹமட் சம்சுரி மொக்தார், கிளந்தானின் அஹமட் யாக்கூப், ஜோகூரின் ஒஸ்மான் சபியான், பினாங்கு முதலமைச்சர் செள கொன் இயோ, சாபா முதல்வர் ஷாபி அப்டால் ஆகியோர் வந்திருந்தனர்.
அஹமட் சம்சுரியை வினவியதற்கு அவர் எண்ணெய் உரிமப் பணத்தை கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து மாநில அரசு நேரடியாக பெறும் என்பதை உறுதிப்படுத்தினார்.
“திரெங்கானு உள்பட எல்லா மாநிலங்களும் எண்ணெய் உரிமப் பணம் நேரடியாகவே வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்”, என்று கூறிய அஹமட், குறைந்தது ஐந்து விழுக்காடாவது கொடுக்கப்படும் என்றார்.