ஜோ லோவின் வழக்கறிஞர் எம்ஏசிசி-ஐ தொடர்பு கொள்ளவில்லை

1எம்டிபி-உடன் தொடர்புள்ள, சர்ச்சைக்குரிய தொழில் முனைவர் ஜோ லோவின் வழக்கறிஞர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்ஏசிசி) இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என ஆதாரங்கள் கூறுகின்றன.

“ஜோலோவின் வழக்கறிஞர் எங்களை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை, அவர் ஏன் நேரிடையாக பேசாமல், வழக்கறிஞர் மூலம் பேச வேண்டும்?” என்று மலேசியாகினியிடம் கூறப்பட்டது.

இதனை உறுதிபடுத்த, மலேசியாகினி எம்ஏசிசி ஆணையாளர் சுக்ரி அப்துல் மற்றும் 1எம்டிபி விசேட அதிரடிப்படைத் தலைவர் அப்துல் காணி பட்டேல் ஆகியோரைத் தொடர்புகொண்டது.

இன்று, அமெரிக்காவில் இருக்கும் சட்ட நிறுவனமான, கோப்ரே & கிம், தொழிலதிபர் ஜோ லோ தனது வழக்கறிஞரை இன்று எம்ஏசிசி-ஐ தொடர்பு கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளதாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லோ மற்றும் வழக்கறிஞர் நிக் ஃபைசால் அரிஃப் கமில் இருவரையும், எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான விசாரணைக்கு உதவ எம்ஏசிசி அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.