கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின், பிகேஆர் வேட்பாளர் எம்.மனோகரன் பாரிசான் நேசனல் (பிஎன்) வேட்பாளர் சி. சிவராஜின் தேர்தல் வெற்றிக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
மனோகரன், 59, சி.சிவராஜ்-க்கு எதிராக, குமார் அசோசியேட்ஸ் வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலம் உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கை தாக்கல் செய்தார்.
பூர்வக்குடி மக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, சிவராஜ் அவர்களுக்கு இலஞ்சம் கொடுத்துள்ளார், இது தேர்தல் குற்றச்சாட்டுகள் சட்டம் 1954-ன் படி குற்றம் என்பதால், மே 9, ஜிஇ14 முடிவுகள் இரத்து செய்யப்பட வேண்டுமென மனோகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெலாய் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய பகாங் மந்திரி பெசாருமான வான் ரோஸ்டி வான் இஸ்மாயில்-உடன் இணைந்து, ஒராங் அஸ்லி வாக்காளர்கள், பிஎன்னுக்கு வாக்களிப்பதை உறுதி செய்ய RM30-லிருந்து RM1,000 வரையில், தோக் பாத்தின்கள் வழி (கம்பத்து தலைவர்கள்) இலஞ்சம் கொடுக்க, சிவராஜ் முயன்றுள்ளதாக மனோகரன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
11-வது பொதுத் தேர்தலில் இருந்து, தொடர்ந்து 3-வது தவணையாக ஜெலாய் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள வான் ரொஸ்டி, அப்பகுதியில் நன்கு அறிமுகமானவர். அவர் மூலமாகவே, பூர்வக்குடி மக்களுக்குச் சிவராஜ் அறிமுகமானார், காரணம் அம்மக்கள் வெளியூர் ஆட்களைச் சுலபத்தில் நம்புவது கிடையாது என மனோகரன் மேலும் கூறியுள்ளார்.
14-வது பொதுத் தேர்தலில், சிவராஜ் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் 10,307 வாக்குகளைப் பெற்று, சக வேட்பாளர்கள் நால்வரை வென்றார்.
பணம் பத்தும் செய்யுமடா சாமி!