துன் டாக்டர் மகாதிர் முகமட், மக்கள் விரும்பும் வரை அல்லது அவரது சேவை மக்களுக்குத் தேவைப்படும் வரை, பிரதமராகப் பணியாற்றத் தயாராக இருப்பதாக கூறினார்.
“ஆனால், நிச்சயமாக நான் எவ்வளவு காலம் வாழமுடியும் என்பது எனக்குத் தெரியாது,” என்று கூறிய அவர், இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனக்கு 95 வயதாகிவிடும் என்றார்.
இன்று, தோக்கியோ, நிக்கேய் மாநாட்டில் பேசிய டாக்டர் மகாதிர், உலகிலேயே ஆக மூத்தப் பிரதமராக தான் இருப்பதை வலியுறுத்தினார்.
“நான் 95 வயதை அடைந்தும், பிரதமராக இருக்க நேர்ந்தால், அது ஒரு சாதனைதான்,” என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார்.
நாட்டிற்குச் சேவையாற்றுவது பற்றி நினைப்பதாக அவர் கூறினார்.
“நான் அதைத்தான் செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்பினால், நான் அவர்களின் விருப்பத்தைப் பின்பற்றுவேன்,” என்றும் அவர் கூறினார்.
-பெர்னாமா