அரசுத் துறைகளும் ஜிஎல்சிகளும் சம்பந்தப்பட்ட பல முறைகேடுகள் குறித்து பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்துக்குத் தெரிய வந்திருப்பதாக மூத்த ஆலோசகர் மன்ற(சிஇபி)த் தலைவர் துன் டாயிம் சைனுடின் தெரிவித்தார்.
“குட்டி 1எம்டிபிகள் நிறையவே உள்ளன”, என்று புளூம்பெர்க்கிடம் தெரிவித்த டயிம், “இழப்புகள் மலைக்க வைக்கின்றன. கணக்கிட்டு வருகிறோம். பெரிது மிகப் பெரிது”, என்றார்.
போலீசும் எம்ஏசிசியும் 1எம்டிபி விவகாரம் தொடர்பில் குற்றப்பத்திரிக்கை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் நிதி அமைச்சு “சிவப்புக் கோப்புகளை”க் கவனமாக ஆராய்ந்ததில் முந்தைய அரசாங்கத்தில் கேள்விக்குரிய வணிக முடிவுகள் பல எடுக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தது.
மற்றொரு புறம் சிஇபி அரசுத் துறைகளுடனும் அரசுத் தொடர்பு நிறுவனங்களுடனும் (ஜிஎல்சி) பல சந்திப்புகளை நடத்தி வந்தது.
அச்சந்திப்புகளில்தான் பல முறைகேடுகள் குறித்து டயிமுக்குத் தெரிய வந்தது.
“பொறுப்பான இடங்களில் இருப்போர் செலவிடப்படும் ஒவ்வொரு சென்னும் முறையாக செலவிடப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். முறைகேடுகளுக்கு இடமளிக்கக் கூடாது. ஒவ்வொரு சென்னுக்கும் கணக்குக் காண்பிக்க வேண்டும்”, என்றாரவர்.