டாக்டர் மகாதிர் முகம்மட் குறிப்பிட்ட காலத்துக்குள் பிரதமர் பதவியை மாற்றிவிட வேண்டும் என்று காலவரையெல்லாம் விதிக்கப்போவதில்லை என பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.
“சிலர் நிகழ்ந்துள்ள (பிஎன்னிடமிருந்து பக்கத்தான் ஹரப்பானுக்கு) ஆட்சிமாற்றம் நீடிக்காது என்று நினைக்கிறார்கள். நான் அப்படி எண்ணவில்லை.
“அது நீடிக்காமல் உடைந்துபோக எனக்கும் மகாதிருக்குமிடையில் பெரும் மோதல்கள் நிகழ வேண்டும். நான் ஏற்கனவே தெளிவாக உணர்த்தி விட்டேன், முதலாவதாக அவர்தான் பிரதமர். இரண்டாவதாக இவ்வளவு காலம்தான் அவர் பிரதமராக இருக்க வேண்டும் என்று காலவரையெல்லாம் விதிக்கப்போவதில்லை என்று”.
இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அன்வாரும் ஹரப்பானும் மகாதிர் வாக்குறுதி அளித்ததுபோல் ஈராண்டுகளில் பிரதமர் பொறுப்பை பிகேஆர் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப் போவதில்லை.
ஹரப்பான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மகாதிருக்குப் போதுமான இடமும் காலமும் வழங்கப்பட வேண்டும் என்று அன்வார் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த வாரம், மகாதிர் பேசியபோதுகூட தம்முடைய இரண்டாம் தவணை பிரதமர் பதவிக் காலம் ஈராண்டுகளுக்குள் முடிவுக்கு வரலாம் அல்லது அதைத் தாண்டியும் செல்லலாம் என்றார். பக்கத்தான் ஹரப்பான் ஈராண்டுகளில் பதவிமாற்றம் என்பதை உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்காது என்றவர் சொன்னார்.
மகாதிருக்குக் காலவரை விதிப்பது அவருடைய பதவிக்கு ஒரு பலவீனத்தைக் கொடுத்து அவர் ஆற்றும் செயல்களைப் பாதித்துவிடும் என அன்வார் கூறினார்.
“இப்போது அவருக்குத் தேவைப்படும் ஆதரவைக் கொடுப்பது முக்கியம்.. அவர் சிறப்பாக ஆட்சி செய்ய இடமளிக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதை நானறிவேன்.
“அதனால்தான் என் பங்கு குறைவாக உள்ளது. கெஅடிலானின் (பிகேஆர்) பலருக்கு இதனால் ஆத்திரம். என்னைக் கேட்டால் ‘அவர் செய்ய வேண்டியதைச் செய்து முடிக்கட்டும். அதற்கு இடமளியுங்கள்’ என்பேன்”, என்று அன்வார் சொன்னார்.