தமிழ் வழி ஆரம்பக் கல்வி வழங்கும் தமிழ்ப்பள்ளைகளைச் சீரமைக்க கல்வி அமைச்சர் ஆர்வம் கொண்டுள்ளதாக கோலாலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறினார். நேற்று கல்வி அமைச்சருடன் நடத்திய சந்திப்பு பயன் மிகுந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
நம்பிக்கை கூட்டணியின் கீழ் தமிழ்ப்பள்ளிகள்களின் சிக்கல்களைக் களைய ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சேவியர் ஜெயகுமார், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார், போர்ட் டிக்சன் சட்டமன்ற உறுப்பினர் ரவி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, பெட்டாலிங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ரஜிவ் ரிசிகரண், போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் பாலகோபால் ஆகியோர் அக்குழுவில் உள்ளனர். இக்குழுவுக்கு சிவகுமார் அவர்கள் தலைமை வகிப்பதாக சேவியர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் முனைவர் மஸ்லி மாலிக் அவர்களின் அலுவலகத்தில் சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற அந்த சந்திப்பில் தமிழ்க்கல்வியின் முழுமையான சீரமைப்புக்கான கருத்துகள் பரிமாறப்பட்டதாக சேவியர் கூறினார். அவருடன் போர்ட் டிக்சன் சட்டமன்ற உறுப்பினர் ரவியும் உடன் இருந்தார்.
தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்புக்காக இதுவரையில் பகிர்ந்துகொள்ளப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் அவை இருந்ததாக சேவியர் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சின் நேரடி கண்காணிப்பில் தமிழ்ப்பள்ளிக்காக ஒரு தனிப் பிரிவு அமைக்கப் பட வேண்டும் என்றும், அதன்வழி மாநில அளவிலும், வட்டார அளவிலும் பணியாற்ற போதுமான திறன் கொண்ட, அதேவேளையில் தமிழ்க்கல்வியில் ஆர்வம் கொண்டவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார். இதன்வழி தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த இயலும் என்றாரவர்.
மேலும், தமிழ்ப்பள்ளிகள் தேசியப்பள்ளிகளைப் போல் நடத்தப்பட வேண்டும் என்றும், அவை எதிர் நோக்கும் அடிப்படை சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டு தீர்க்கப்பட வேண்டும் என்றார்.
குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகளைத் தங்கும் வசதி கொண்ட பள்ளிகளாகவும் தொழிற்திறன், கலை, பண்பாட்டு கல்வி வழங்கும் மையங்களாகவும் மாற்றம் செய்ய வேண்டும். அதோடு அதிக இந்தியர்கள் வசிக்கும் இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். சுமார் 150 பள்ளிகளில் 50-க்கும் குறைவான மாணர்வர்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது போன்ற பள்ளிகளை அவசரப்பட்டு நாம் மூடிவிடக்கூடாது என்பதை வலியுறுத்திய சேவியர், மாறாக அவற்றை எப்படி மறுவடிவம் கொடுத்து பாதுகாப்பது என்ற சிந்தனையில் இறங்க வேண்டும் என்றார்.
புதிய அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளை மேம்பாடு செய்யும், அதன் கல்வித் தரத்தை உயர்த்தும். அவ்வகையில் அதில் உள்ள சிக்கல்கள் அனுகப்படும். நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் தமிழ்ப்பள்ளிகள் சிறப்படையும் என்பதில் கல்வி அமைச்சர் உறுதியாக உள்ளதாக சேவியர் மேலும் கூறினார்.