இந்திரா காந்தியின் குழந்தை கண்டுபிடிக்கப்படுவதை விரைவுபடுத்த ஐஜிபியை சந்திக்கிறார் குலா

 

நீதிமன்ற உத்தரவின்படி குழந்தை பிரசனா டிக்சாவை கண்டுபிடித்து அதன் தாயார் இந்திரா காந்தியிடம் ஒப்படைக்கும் பணியை விரைவுபடுத்துவது குறித்து இந்திரா காந்தியின் வழக்குரைஞரும் தற்போது மனிதவள அமைச்சருமான மு. குலசேகரன் போலீஸ் படைத் தலைவரை (ஐஜிபி) சந்திக்க விருக்கிறார்.

பிரசனா டிக்சாவை அதன் தாயாரிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரித்துவான் அப்துல்லாவுக்கு உத்தரவு பிறப்பித்துருந்தது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக முகமட் ரித்துவானை கைது செய்யும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது சம்பந்தமாக ஐஜிபியை தாம் விரைவில் சந்திக்கவிருப்பதாக குலா தெரிவித்தார்.

முகமட் ரித்துவானை கண்டுபிடிப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. ஆனால் அதைச் சாதிப்பதற்கு நம்மால் ஆன அனைத்தையும் செய்வோம் என்று குலா மேலும் கூறினார்.

முகமட் ரித்துவான் ஏப்ரல் 2009 இல் அவரது குழந்தைகளை தாயார் இந்திரா காந்தியின் ஒப்புதல் இன்றி இஸ்லாத்துக்கு மதம் மாற்றம் செய்தார்.

2010 ஆம் ஆண்டில், ஈப்போ உயர்நீதிமன்றம் மூன்று குழந்தைகளின் முழு பராமரிப்பை இந்திரா காந்திக்கு வழங்கியது. மேலும். பிரசனா டிக்சாவை அதன் தாயாரிடம் ஒப்படைக்கும்படி முகமட் ரித்துவானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2016 இல், நீதிமன்ற உத்தரவுப்படி குழந்தை பிரசனா டிக்சாவை தாயார் இந்திரா காந்தியிடம் ஒப்படைக்கத் தவறி விட்டதால், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக முகமட் ரித்துவாணை கைது செய்யும்படி பெடரல் நீதிமன்றம் ஐஜிபிக்கு உத்தரவிட்டது.

ஐஜிபி முகமட் பூசி ஜனவரி 29 இல் வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஈப்போ உயர்நீதிமன்றம் மே 30, 2014 இல் முகமட் ரித்துவானை கைது செய்யும்படி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ரித்துவானை கைது செய்யும் நடவடிக்கையை போலீஸ் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.