அரசாங்க தலைமைச் செயலாளராக அபு காசிம் நியமிக்கப்படலாம்

 

தற்போது அரசாங்க தலைமைச் செயலாளராக இருக்கும் அலி ஹம்சாவின் இடத்தில் முன்னாள் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைவர் அபு காசிம் நியமிக்கப்படலாம் என்று சினார் ஹரியான் கூறுகிறது.

அரசு சேவையில் ஊழலை ஒழிப்பதற்கான சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட ஜிஐஎசிசி அமைப்பின் தலைவராக அபு காசிம் ஜூன் 1 இல் நியமிக்கப்பட்டார்.

சினார் ஹரியான் அறிக்கையின்படி, அபு காசிம் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு பேரரசர் ஒப்புதல் அளித்தால், ஜிஐஎசிசி என்ற அமைப்பு தலைமைச் செயலாளரின் கீழ் கொண்டுவரப்படும்.

இச்செய்தி பொதுச் சேவை இலாகாவின் முகநூலிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

63 வயதான அலி ஹம்சா எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவரது பதவி காலத்தை பாரிசான் அரசாங்கம் நீட்டித்தது.

அரசாங்க தலைமைச் செயலாளர் பதவிக்கு ஊழல் எதிர்ப்பில் அனுபவமிக்க ஒருவர் தேவை என்று மகாதிர் கூறியிருந்தார். அபு காசிமுக்கு ஊழல் எதிர்ப்பில் அதிக அனுபவம் உண்டு.

அபு காசிம் அடுத்த மாதத்தில் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படலாம் என்று வட்டாரம் கூறுகிறது.