பக்கத்தான் ஹரப்பான் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமானால் மலேசியர்களின் – குறிப்பாக, நடுத்தர, குறைந்த வருமானம் பெறும் மலாய்க்காரர்களின் -பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்கிறார் டிஏபி அரசியல் விவகாரப் பிரிவுத் தலைவர் லியு சின் தொங்.
“ஐந்தாண்டுக் காலத்தில் அவர்களின் வாழ்க்கை மேம்பாடு காணுமானால் அடுத்த தேர்தல் குறித்து கவலைபட வேண்டியதில்லை. இதுதான் பக்கத்தான் ஹரப்பான் எதிர்நோக்கும் சவால்.
“கடந்த சில ஆண்டுகளில் பொருளாதாரம் பற்றி, குறிப்பாக ஜிஎஸ்டி அமலாக்கத்தால் விலைவாசி உயர்ந்து பற்றியும் ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ந்தது பற்றியும் அரசாங்கச் செலவினங்கள் குறைக்கப்பட்டு அதன் விளைவாக சந்தையில் பணவரவு குறைந்தது பற்றியும் நிறைய குறை சொல்லப்பட்டிருக்கிறது”, என சின் சியு டெய்லிக்கு அளித்த நேர்காணலில் லியு கூறினார்.
உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்படாதிருக்கும் பட்சத்தில், பண இருப்பு உள்ளவர்கள் செலவிடுவதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் என்றாரவர்.
அதற்கு ஹரப்பான் அரசு, சம்பளத்தை உயர்த்தவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஏகபோக உரிமைகளை உடைத்தெறியவும் வழிவகை கண்டு ஊழல்களுக்கும் வேண்டியவர்களுக்குச் சலுகைகாட்டும் விவகாரங்களுக்கும் முடிவு கட்ட வேண்டும்.
ஊழல்களை ஒழித்து ஆண்டுக்கு 20,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியுமானால் அடுத்த பொதுத் தேர்தலில் புத்ரா ஜெயாவைத் தக்கவைத்துக்கொள்வதில் பிரச்னை இருக்காது என்றவர் சொன்னார்.