‘ஞாயிறு’ நக்கீரன்- நாட்டின் மையப் பகுதியில் இதயம் போன்று அமைந்திருக்கும் சிலாங்கூர் மாநிலத்தின் 16-ஆவது மந்திரி பெசராக அமிருடின் ஷாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இளைஞர் என்ற தகுதியுடன் 40 வயதை எட்டாமல் இருக்கும் இவர் இந்த பதவியில் அமர்த்தப்பட்டது ஒரு புதிய திருப்பமாகும்.
சுங்கை துவா தொகுதியில் இருந்து மூன்றாவது தவணையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இவர், முதல் தவணையில் தற்பொழுது நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக டத்தோ த. மோகனை 2008 பொதுத் தேர்தலில் வென்றதுடன், சாதாரண சட்டமன்ற உறுப்பினராகவே அந்தத் தவணையைக் கழித்தார்.
அடுத்த 13-ஆவது பொதுத் தேர்தலில் அதே ம.இ.கா-வின் காஜாங் ரவி என்ற அழைக்கப்படும் டத்தோ ரவியை வீழ்த்தி மீண்டும் சிலாங்கூர் சட்டமன்றத்தில் நுழைந்தபொழுது, மாநில ஆட்சிக் குழுவில் இடம் பெற்றார். டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தலைமையிலான மாநில ஆட்சி குழுவில் இளைஞர், விளையாட்டு, தொழில் முனைவர் வளர்ச்சி மற்றும் பாரம்பரிய கிராம மேம்பாட்டுத் துறைக்கு அமிருடின் ஷாரி பொறுப்பு வகித்தார்.
தற்பொழுது மீண்டும் அதே ரவியை வெற்றி கொண்டு அதே அஸ்மின் தலைமையில் அதேப் பொறுப்பை ஏற்று மாநில ஆட்சிக் குழுவில் தொடர்ந்த நிலையில்தான் இன்று புதிய மந்திரி பெசாராக அமிருடின் பொறுப்பேற்றுள்ளார்.
இன்று இவரை நேரடியாக சென்று வாழ்த்திய சிலாங்கூர் மாநில நம்பிக்கை கூட்டணியின் இளைஞர்கள், இவருக்கு தமிழர்கள் மரபு வழியான மரியாதையாக பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தனர்.
அதோடு சிலாங்கூர் இந்தியர்களின் மேம்பாடு குறித்தும், மக்கள் நீதி கட்சியின் பிரதிநிதிதுவம் மாநில அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என்ற வகையில் ஒரு கடிதத்தையும் சமர்பித்ததாக அதன் ஒருங்கிணைப்பாளர் இலா. சேகரன் செம்பருத்தியிடம் தெரிவித்தார்.
“எங்களை அன்புடனும் பண்புடனும் வரவேற்ற மந்திரி பெசாரிடம், நம்பிக்கை கூட்டணி தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அவரது ஆட்சி அமைய வேண்டும், அதன் அடிப்படையில் அனைத்து நிலைகளிலும் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் உருவாக அவர் செயல்படுவார் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது” என்று கூறினோம் என்கிறார் சேகரன்.
கடந்தகால மந்திரி பெசார்கள்!
ஹருண் இட்ரிஸுக்குப் பின் மூன்று தவணைகாளாக மந்திரி பெசார் பொறுப்பு வகித்த முகமட் தாயிப், ‘மண்’ பிரச்சினையில் சிக்கியதால் மூன்றாம் தவணையை நிறைவு செய்ய முடியாமல் போனது; அவருக்கு அடுத்ததாக 1997-இல் பொறுப்புக்கு வந்த அபு கசான் ஓமார் ‘பெண்’ சம்பந்தப்பட்ட சிக்கலால் இடையில் பதவி விலக நேர்ந்தது.
அந்த சந்தர்ப்பத்தில் இந்தோனேசிய வம்சாவளியும் பல் மருத்துவருமான டத்தோஸ்ரீ கிர் தோயோவை சிலாங்கூர் மந்திரி பெசாராக இன்றைய பிரதமரும் அன்றைய பிரதமருமான துன் மகாதீர் நியமித்தார். அவரும் மண் சம்பந்தப்பட்ட ஊழல் பொறியில் சிக்குவதற்குள் தேசிய முன்னணி ஆட்சியே 2008-இல் கரைந்து போனது. ஆனாலும் அவர் நீதிமன்ற படிகளை எண்ணி முடித்தபின் சிறைக் கம்பிகளையும் எண்ணி விட்டு பின் வெளியேறினார்.
தொடர்ந்து, மாநில மக்கள் கூட்டணி ஆட்சியில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக பதவி ஏற்ற டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிம், இரண்டாவது தவணையாக பொறுப்பு ஏற்றபோதே தடையும் தடுமாற்றமும் பலவித ஊகமும் நிலவி, கடைசியாக.., ஒருவழியாக மந்திரி பெசாராக பதவி ஏற்றாலும் கட்சிக்குள் ஏற்பட்ட முறுகல் நிலையாலும் பகைப் போக்காலும் அவர் குறுகிய காலத்திலேயே பதவி விலக நேர்ந்தது.
அந்த சந்தர்ப்பத்தில்தான் டத்தோஸ்ரீ அன்வார் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் ஆக நினைத்து ‘கே-திட்டம்’(Kajang Plan) என்ற பெயரில் ஓர் இரகசிய அரசியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரசியல் பாதுகாப்பிற்காக அன்வார் மேற்கொண்ட அந்தத் திட்டத்தை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் இலாவகமாக முறியடித்தார்.
அதிரடியாக வழக்கை சந்திக்க வேண்டிய நெருக்கடிக்கு அன்வார் தள்ளப்பட்டதால், முன்னரே திட்டமிட்டபடி காஜாங் இடைத் தேர்தலில் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா, அன்வாருக்குப் பதிலாக களம் இறக்கப்பட்டார். அதற்கு ஏதுவாக அந்தத் தொகுதியில் முன்னமே தேர்ந்தெடுக்கப்பட்ட பிகேஆர் உறுப்பினரை விலக வைத்து, அதன்வழி இடைத்தேர்தல் உருவாக்கப்பட்ட அந்த சுழலை தேசிய முன்னணி வகையாகப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் கூட்டணியை, குறிப்பாக அன்வாரையும் மக்கள் நீதிக் கட்சியையும் பின்னி எடுத்தது.
அந்த வேளையில், நஜிப் நேரடியாக அன்வாரை ‘தாக்கு தாக்கென்று’ தாக்கிவிட்டர். அதற்கு பதில் சொல்ல முடியாமல் பிகேஆர் தடுமாறினாலும், கடைசியில் வான் அஸிஸா வென்றார். ஆனாலும், அவரால் மந்திரி பெசாராக பொறுப்பு ஏற்க முடியவில்லை. சிலாங்கூர் அரண்மனைத் தரப்பில் அவருக்கு பச்சைக் கொடி காட்டப்படவில்லை. அதனால், அந்தச் சுழலில் பிகேஆர் வட்டத்தில் பெருங்குழப்பமும் தடுமாற்றமும் நிலவியது.
ஒரு வழியாக அஸ்மின் அலி மந்திரி பெசாராக, 2014-இல் சிலாங்கூரின் 15-ஆவது மந்திரி பெசாராக பொறுப்பு ஏற்றார். அவர் மாநிலத்தை சிறப்பாக நிர்வகித்தாலும் தற்பொழுது இரண்டாவது தவணை தொடக்கத்திலேயே மத்தியக் கூட்டரசில் முக்கியமான துறைக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய சூழல் உருவானதால் மிகவும் நெருக்கடிக்கு ஆளானார் அஸ்மின்.
மாநில மந்திரி பெசார் பொறுப்பில் மிகுந்த ஆர்வமும் உத்வேகமும் கொண்டிருந்த அஸ்மின் மத்தியப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். நேற்று(ஜூன் 18) மாநில உயர் அதிகாரிகளுடனும் மற்ற பொறுப்பாளர்களுடனும் கலந்து கொண்ட பிரியாவிடை நிகழ்ச்சியில் கண் கலங்கிய காட்சி அவர் நல்லாட்சிக்கான சாட்சியாகும்.
எது எவ்வாறாயிலும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்கள் இடைநிற்கும் சுழல் ஏதோ ஒரு வகையில் தொடரும் வேளையில்தான் பதினாறாவது மந்திரி பெசாராக இளம் அரசியல் தலைவரான அமிருடின் ஷாரி இன்று பொறுப்பேற்றுள்ளார். அவர் பணி சிறக்க வாழ்த்துவோம்!