பாஸ் உதவித் தலைவர் முகம்மட் அமர் நிக் அப்துல்லா, அம்னோவைக் கலைத்துவிட்டு அதன் உறுப்பினர்கள் பாஸில் சேரலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.
“என்னைக் கேட்டால் அம்னோ கதை முடிந்தது என்பேன். அம்னோவைக் கலைப்பதே சிறந்த முடிவாகும்.
“எல்லாரும் பாஸில் வந்து சேருங்கள். பல விவகாரங்களுக்குத் தீர்வு காண முடியும். அவர்களுக்காக பாஸின் வாசல் திறந்தேயுள்ளது”, என முகம்மட் அமர் நேற்றிரவு கோத்தா பாருவில் பாஸின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பின்போது செய்தியாளர்களிடம் கூறினார்.
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பல கட்சிகள் பிஎன்னிலிருந்து விலகிக் கொண்டுள்ளன.
சாபா, சரவாக் கட்சிகள் எல்லாமே அக்கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டன. பிஎன்னிலிருந்து விலக பிபிபி-இல் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
13கட்சிகளைக் கொண்ட கூட்டணியில் இப்போது நான்கு மட்டுமே எஞ்சியுள்ளன. அம்னோ, மசீச, மஇகா, கெராக்கான்.
அம்னோவுக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க ஜூன் 30-இல் தேர்தல் நடக்கிறது.
ஆனால், அக்கட்சித் தேர்தல் குறித்து முகம்மட் அமர் கருத்துரைக்க விரும்பவில்லை.
“அம்னோ வேறொரு கட்சி என்பதால் அது (கட்சித் தேர்தல்) குறித்துக் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. அது அவர்களின் விவகாரத்தில் தலையிடுவதாக அமையும்”, என்றார்.