தனது மனைவி ரோஸ்மா மன்சோர், நகைகள் வாங்குவதற்கான நிதி எங்கிருந்து வந்ததென தனக்குத் தெரியாது என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார்.
“இந்த நிதி உண்மையில் எங்கிருந்து வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை,” என்று ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, அந்தப் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
முன்னதாக, ஜோ லோ 1எம்டிபி நிதியைப் பயன்படுத்தி ரோஸ்மாவிற்கு வாங்கி கொடுத்ததாக அமெரிக்க அதிகாரிகளால் நம்பப்படும் – 27.3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஓர் இளஞ்சிவப்பு வைர நகைகள் உட்பட – நகைகள் பற்றி நஜிப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
வாக்குறுதி அளித்தபடி, தனக்கு அந்த நகைகள் வழங்கப்படவில்லை என ரோஸ்மா தன்னிடம் கூறியதாகவும் நஜிப் விளக்கப்படுத்தினார்.
“எனக்கு என்ன தெரியும் என்றால், நான் என் மனைவியிடம் கேட்டபோது, அவர் ஒரு பரிசு தனக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் தான் அதைப் பெறவில்லை என்று என்னிடம் கூறினார்,” என நஜிப் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டியுள்ளது.
லங்காவி தீவில், விடுமுறையில் இருக்கும் நஜிப், சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ்-க்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்தார்.
பக்காத்தான் ஹராப்பானிடம் தோல்வி கண்டபின்னர், அந்தத் தம்பதியினர் ஓய்வெடுக்க வெளிநாட்டிற்குச் செல்ல திட்டமிட்டனர், ஆனால் குடிநுழைவுத் துறை இலாகா, மலேசியாவை விட்டு வெளியேற முடியாமல் அவர்களின் பெயர்களைக் கருப்புப் பட்டியலிட்டதால், அவர்களின் விருப்பம் நிறைவேறாமல் போனது.
ரோஸ்மாவின் நகைகளுக்கு மட்டுமின்றி, அவர் முதல் கணவரின் மகனான ரீஷா அஸிஸ் திரைப்படம் தயாரிக்க நிதியளிக்கவும் 1எம்டிபி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என அமெரிக்க நீதித்துறை நம்புகிறது.
ரிஷாவின் பட நிறுவனம் தயாரித்த திரைப்படங்களில் ஒன்று ‘தி வூல்ஃப் ஆஃப் வோல் ஸ்ட்ரீட்’ ஆகும்.
அந்நிதிகளுக்கான மூலம் விசாரணை செய்யப்படுவதாக ராய்ட்டர்ஸிடம் கூறிய நஜிப், அதுபற்றி மேலும் தெளிவுபடுத்த மறுத்துவிட்டார்.
“ரிஷா மிகவும் நன்றாக செய்திருக்கிறார் என்று நான் கூற விரும்புகிறேன் … அத்திரைப்படங்கள், 800 மில்லியன் டாலருக்கும் அதிகமாக விற்பனையாயின.
“எனவே, இது தவறானது இல்லை, இது ஓர் இலாபமாகும். ஆனால், நிதிக்கான மூலம் விசாரணைகளுக்கு உட்பட்டது, நான் அதை அனுமதிக்கலாம் என்று நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
புத்ராஜெயாவில் இருந்தபோது, 1எம்டிபி பிரச்சினையில் அமைதியைக் கடைப்பிடித்ததையும் அவர் தற்காத்து பேசியுள்ளார்.
“இவை அனைத்தும் மலேசியாவுக்கு வெளியே நடக்கின்றன.
“நான் ஏதாவது சொன்னால், சில சர்வதேசப் பிரச்சனைகள் எழும். நான் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கலாம், அது அவர்களுடனான இராஜதந்திர உறவைப் பாதிக்கும்.
“அதனாலேயே, நான் அதைப் பற்றி பேசுவதைத் தவிர்த்திருக்கிறேன்,” என நஜிப் தெரிவித்தார்.