மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசிசி)த் தலைவர் முகம்மட் ஷுக்ரி அப்துல், அரசு அதிகாரிகள் தலையாட்டிப் பொம்மைகள்போல் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
“அரசு அதிகாரிகளுக்கு என் எச்சரிக்கை இதுதான்: இனிமேற்பட்டு தலையாட்டிப் பொம்மைகளாக இருக்காதீர்கள். திட்டப் பணிகளைக் கொடுக்கும் அதிகாரம் அமைச்சர்களுக்கு இல்லை. கொள்கைகளை வகுக்கும் அதிகாரம் மட்டுமே அவர்களுக்கு உண்டு.
“(திட்டங்கள் சரியில்லை என்றால்) தலைமைச் செயலாளரும் துறைத் தலைவர்களும் முடியாது என்று சொல்ல வேண்டும். வளைந்து குழைந்து போகக் கூடாது. ஆமாம் சாமிகளாக இருத்தல் கூடாது. எது சரியோ அதைத்தான் செய்ய வேண்டும். அதற்காக ஆத்திரப்படுகிறார்களா, கவலைப்படக்கூடாது”, என சினார் ஹரியானிடம் முகம்மட் ஷுக்ரி கூறினார்.
அரசாங்கமும், வெறும் தலையாட்டிப் பொம்மைகளாக இல்லாமல் நேர்மையாக பணிபுரியும் அதிகாரிகளைப் பாராட்ட வேண்டும் என்றும் சொன்னார்.
“ஒருவர் உண்மையைச் சொன்னால் அவரைப் பாராட்டுங்கள். தலையாட்டிப் பொம்மைகளை அகற்றுங்கள். அவர்களால்தான் நாடு கெட்டுப் போகிறது. இப்படிப் பேசுவதற்காக என்மீது ஆத்திரப்படலாம். ஆனால், நான் உண்மையைத்தான் சொல்கிறேன்.
“நேர்மையாய் இருப்பது சிரமம்தான். ஆனால், அதுதான் பாராட்டுக்குரியது. அதற்குத் துணிச்சல் இல்லாதவர்கள் அமைச்சின் தலைமைச் செயலாளராக அல்லது துறைத் தலைவராக இருத்தல் கூடாது”, என்றாரவர்.