இன்று அம்னோவிலிருந்து வெளியேறி பக்கத்தான் ஹரப்பானுக்கு ஆதரவு தெரிவித்த பாகன் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நூர் அஸ்மி கஸாலிக்கு துணைப் பிரதமர் வான் அசிஸா வான் இஸ்மாயில் வரவேற்பு தெரிவித்தார்.
பக்கத்தான் ஹரப்பானுக்கு ஆதரவு தெரிவிப்பது அவரது தேர்வு என்று கூறிய வான் அசிஸா, நாட்டிற்கு மாற்றத்தை கொண்டு வருவதற்காக எந்த ஒரு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எங்களுடன் சேர்ந்து கொள்வதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.
ஆளுங்கூட்டணியின் உறுப்பினராக நூர் அஸ்மி விரும்பினால் ஹரப்பான் பங்காளிக் கட்சிகள் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ற கேள்விக்கு, அதை முடிவு செய்வது பேராக் ஹரப்பானைப் பொறுத்ததாகும் என்று வான் அசிஸா பதில் அளித்தார்.
இன்று முன்நேரத்தில், தாம் அம்னோவிலிருந்து விலகி விட்டதாகவும், பிரதமர் மகாதிரையும் புதிய ஹரப்பான் பெடரல் அரசாங்கத்தையும் ஆதரிக்க உறுதி கொண்டுள்ளதாகவும் நூர் அஸ்மி கூறியிருந்தார்.
கடந்த மாதம், பிஎன்னிலிருந்து கட்சி மாறுகிறவர்களை ஏற்றுக்கொள்வது நிறுத்தப்பட வேண்டும் என்று ஹாரப்பான் கூட்டணியின் தலைவரான மகாதிர் கூறியுள்ளார்.
கட்சி மாறுகிறவர்களை ஹரப்பான் ஏற்றுக்கொள்வது மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்று மகாதிர் தெரிவித்துள்ளார்.