கைப்பற்றப்பட்ட ரொக்கத்தில் ‘அம்னோ’ என்ற சொல் அச்சடிக்கப்படவில்லை, போலீஸ் கூறுகிறது

 

முன்னாள் பிரதமர் நஜிப்புடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள சொத்துகளிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம், சில வட்டாரங்கள் கூறிக்கொள்வது போல், அம்னோவுக்குச் சொந்தமானதா என்பதை போலீஸ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று போலீஸ் கூறுகிறது.

“எங்களுக்கு தெரியாது. ‘அம்னோ’ என்ற சொல் பணத்தில் அச்சடிக்கப்படவில்லை”, என்று பெடரல் வாணிகக் குற்ற விசாரணை இலாகா (சிசிஐடி) இயக்குனர் கமிஷனர் அமர் சிங் கூறினார்.

பணம் அம்னோவுக்குச் சொந்தமானது என்று கூறும் தரப்பினர்கள் இருந்தால், போலீஸ் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தும் என்று அமர் சிங் இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஆனால், இதுவரையில் யாரும் முன்வரவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கடந்த மாதம் நஜிப்புக்குத் தொடர்புடைய சொத்துகளிலிருந்து கைப்பற்றிய பொருள்களை போலீசார் பட்டியலிட்டனர்.

கைப்பற்றப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு ரிம686.37 மில்லியன், அவற்றில் 12,000 வகையான நகைகளும் அடங்கும்.

மே 18 இல், போலீசார் கோலாலம்பூர் பெவிலியன் குடியிருப்புகளில் மேற்கொண்ட அதிரடி சோதணைகளைத் தொடர்ந்து, பல தரப்பினர் போலீஸ் கைப்பற்றிய பணம் அம்னோவுக்குச் சொந்தமானது என்றும் அது மே9 தேர்தல்களுக்கானது என்றும் கூறிக் கொண்டனர்.

அவ்வாறு கூறியவர்களில் நஜிப், அம்னோ தலைமையகம், அம்னோ மூத்த தலைவர் ஷரீர் அப்துல் சமாட் மற்றும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் பங் மொக்தார் ராடின் ஆகியோரும் அடங்குவர்.