ஸ்கோர்பியன் நீர்மூழ்கி ஊழலும் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட அல்தான்துயா கொலையும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சர் முகமாட் சாபு கூறியுள்ளார்.
இந்த ஊழல் சம்பந்தமாக நேற்று சுவராம் என்ற மனித உரிமை இயக்கம், தற்காப்புத்துறையின் அமைச்சர் முகமட் சாபுவுடன் ஒரு சந்திப்புக் கூட்டத்தை அவரது அலுவலகத்தில் நடத்தியது.
சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் நஜிப்பின் ஆலோசகராக இருந்த ரசாக் பகிண்டாவின் நிறுவனதிற்கு வழங்கப்பட்ட ரிம570 மில்லியன் கமிசன் பணம் இந்த நீர்மூழ்கி விவகாரத்திலும் அல்தான்துயா கொலையிலும் தொடர்புடையதாகும்.
ரசாக் பகிண்டா, மங்கோலிய அழகியான அல்தான்துயாவை தனது மொழிபெயர்ப்பாளராகவும் அந்தரங்கச் செயலாளராகவும் வைத்திருந்தார்.
2008 ஆம் ஆண்டு, இந்த ரிம570 மில்லியன் ஊழல் முதன்முதலாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. அப்பொழுது தற்காப்புத்துறையின் அமைச்சராக இருந்த நஜிப் இதை வன்மையாக மறுத்தார்.
இந்த ஊழல் சம்பந்தமாக 2009 ஆம் ஆண்டு சுவராம் இயக்கம் பிரான்ஸ் நாட்டில் ஒரு வழக்கை பதிவு செய்ததாக வழக்கறிஞர் கா. ஆறுமுகம் தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு பிரான்ஸ் நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகிறது. அந்த விசாரணையில் ரிம570 மில்லியன் நஜிப்பின் ஆலோசகர் ரசாக் பகிண்டாவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டது என்கிறார் சுவராம் இயக்கத்தின் இயக்குனருமான ஆறுமுகம்.
அல்தான்துயா சரபு 2006 இல் இராணுவம் பயன்படுத்தும் வெடிமருந்து வைத்து கொல்லப்பட்டார். இந்தக் கொலையின் விசாரணையில் 2 போலீஸ் கமாண்டோக்கள் குற்றம் சாற்றப்பட்டு, இறுதியாக 2015 இல் கூட்டரசு நீதிமன்றம் இவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. ஆனால், அந்தக் கொலையின் நோக்கம் இன்னும் புதிராகவே உள்ளது. இதற்கான விசாரணை தொடரவேண்டும் என்று அண்மையில் மலேசியாவிற்கு வருகை தந்திருந்த அல்தான்துயாவின் தந்தை ஸ்டிவ் ஷரிபு மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று தற்காப்பு அமைச்சருடன் நடத்திய சந்திப்பில், நீர்மூழ்கிக் கப்பல் ஊழலும் அல்தான்துயா கொலையும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று சுவராம் கேட்டுக் கொண்டது. இது சார்பான விசாரணையைத் தொடர தற்காப்பு அமைச்சு மேற்படி நடவடிக்கைகளை எடுக்க முற்படும் என்று தற்காப்பு அமைச்சர் தெரிவித்ததாக ஆறுமுகம் கூறினார்.
நேற்று நடந்த இந்த சந்திப்பில் சுவராம் அமைப்பின் நிருவாகி சிவன் துரைசாமி, அமிர் மற்றும் சி4 (C4) அமைப்பின் சிந்தியா கெபிரியல் மற்றும் வழக்கறிஞர் ஃபாடியா நட்வா பிக்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.