408 வங்கிக் கணக்குகளிலுள்ள ரிம1.1பில்லியன் முடக்கப்பட்டுள்ளன, 1எம்டிபி பணிப்படை கூறுகிறது

தனி நபர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றின் வங்கிக் கணக்குகளிலுள்ள மொத்தம் ரிம1.1பில்லியன் பணம் ஜூன் 26 மற்றும் ஜூன் 29 இல் முடக்கப்பட்டுள்ளதாக 1எம்டிபி பணிப்படை கூறுகிறது.

இத்தகவல் இதற்கு முன்பு எம்எசிசி 900 வங்கிக் கணக்குகளை முடக்கி விட்டதாக வெளிவந்த தகவலுக்கு முரணானதாக இருக்கிறது.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் 81 தனி நபர்களுக்கும் 55 நிறுவனங்களுக்களுக்கும் சொந்தமானவை. இவர்கள் கடந்த காலத்தில் 1எம்டிபியிடமிருந்து நிதிகள் பெற்றதாக நம்பப்படுகிறது என்று அறிக்கை கூறுகிறது.

விசாரணை தொடர்வதால் இன்னும் கூடுதலான வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் சாத்தியத்தை நிராகரிப்பதற்கில்லை என்று பணிப்படை மேலும் கூறுகிறது.

முடக்கப்படும் வங்கிக் கணக்குகள் அனைத்தும் நாட்டின் சட்ட அடிப்படையில் செய்யப்படுகிறது என்றும் எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அல்ல என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

பணிப்படை மேற்கொண்டுள்ள விசாரணை நியாயமாகவும், தொழிலியப்படியும், சட்டத்திற்குட்பட்டும் நடத்தப்படுகிறது. ஆகவே, சம்பந்தப்பட்ட தரப்பினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பணிப்படை கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெயில், முன்னாள் எம்எசிசி தலைவர் அபு காசிம் முகமட், எம்எசிசி தலைவர் முகமட் ஷுக்கிரி அப்துல் மற்றும் புக்கிட அமான் ஸ்பெசல் பிராஞ்ச் துணை இயக்குனர் அப்டுல் ஹமிட் பாடோர் ஆகியோர் பணிப்படையின் உறுப்பினர்களாவர்.