அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரத்திற்கு மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தில் தலைமையகத்தில் (எம்எசிசி) விசாரிக்கப்பட்டார்.
ஊடகச் செய்திகளின்படி, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு ரிம2.6பில்லியன் நன்கொடை வழங்கிய சவுதி அரேபிய அரச குடும்பத்தைத் அவர் சந்தித்ததாக கூறிக்கொண்டது குறித்து, எம்எசிசி அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக விசாரணை முடிந்த பின்னர் ஸாகிட் செய்தியாளர்களிடம் கூறினார்.
மாலை மணி 6.30 அளவில் எம்எசிசி ஸாகிட்டின் வாக்குமூலம் பதிவு செய்வதை முடித்துக் கொண்டது.
ஸாகிட் இன்று காலை மணி 9.30 க்கு எம்எசிசி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தார். அவருடன் வழக்குரைஞர் எவரும் வரவில்லை.
விசாரணையை தொழிலியப்படி நடத்தியதற்காகவும், விளக்கம் அளிப்பதற்கு தமக்கு இடளித்ததற்காகவும் ஸாகிட் எம்எசிசிக்கு நன்றி கூறினார்.
1எம்டிபி பற்றிய விவகாரத்திற்கு எம்எசிசி அவர்களுக்கு உரிய நேரத்தில் சரியான விடை காண்பார்கள் என்று தாம் நம்புவதாக ஸாகிட் மேலும் கூறினார்.
நாளை ஸாகிட் எம்எசிசிக்கு வந்து அவரது குடும்பத்திற்குச் சொந்தமான யாயாசான் அகால் பூடி என்ற அறக்கட்டளையின் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டது சம்பந்தமாக அவரது வாக்குமூலத்தை அளிக்கவிருக்கிறார்.
நஜிப் பெற்றதாக கூறப்படும் நன்கொடை சம்பந்தமாக சவூதி அரச குடும்பத்தில் யாரை சந்தித்தீர் என்று கேட்கப்பட்டதற்கு, “உமக்கு பதில் கூறும் பொறுப்பு எனக்கில்லை. எனக்கு எம்எசிசிக்கு பதில் கூறும் பொறுப்பு மட்டுமே உள்ளது”, என்று ஸாகிட் பதில் அளித்தார்.