சர்ச்சைக்குரிய தேசிய குடிமைப் பிரிவை(பிடிஎன்) பிரதமர்துறையின்கீழ் தொடர்ந்து வைத்திருக்க அரசாங்கம் செய்துள்ள முடிவைக் கேட்டு பினாங்கு பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.
புக்கிட் தெங்கா பிரதிநிதியான கூய் ஹிசியாவ் லியோங், “14வது பொதுத் தேர்தலுக்குப் பிந்திய புதிய மலேசியாவில்” பிடிஎன்னுக்கு இடமில்லை என்றார்.
“அது வெறுப்பையும் சகிப்பின்மையையும் பரப்புவதற்கு பிஎன்னால் உருவாக்கப்பட்ட ஒரு பூதம். அதை விரட்டி அடிக்க வேண்டும். அடியோடு ஒழிக்க வேண்டும்”, என கூய் மலேசியாகினியிடம் கூறினார்.
“அரசு அதிகாரிகளையும் மாணவர்களையும் இனப் பிரச்சாரத்தின்வழி மூளைச் சலவை செய்து குறிப்பிட்ட ஓர் இனத்தின் மேலாண்மையை வலியுறுத்தி நாட்டை இனரீதியாக பிரித்து வைக்க உதவும் அரசியல் கருவியாக பிஎன் பயன்படுத்தி வந்த ஓர் அமைப்பை வைத்திருப்பது அவசியம்தானா?”, என்றவர் வினவினார்.
ஹரப்பான் அதன் தேர்தல் கொள்கை அறிக்கையில் பிடிஎன்-னை ஒழிப்பதாக உறுதி கூறியிருந்ததை கூய் நினைவுப்படுத்தினார்.