டிஎபி சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் தியோ பெங் ஹோக் மரணம் குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டத்துறை தலைவரின் அலுவலகம் (ஏஜி) போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) முகம்மட் பூஸி ஹருணை கேட்டுக்கொண்டுள்ளது.
இத்தகவலை புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரும் தியோ குடும்பத்தின் வழக்குரைஞருமான ராம்கர்பால் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
அவர் அளித்த தகவலின்படி, அவரது வழக்குரைஞர் நிறுவனம் கர்பால் சிங் & கம்பனி அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 17) ஏஜி அலுவலகம் பெங் ஹோக் மரணத்தை பற்றி மேலும் விசாரணை செய்யும்படி ஐஜிபியை கேட்டுக்கொண்டது.
பெங் ஹோக் மரணத்தில் அடையாளம் காணப்படாத பலர், எம்எசிசி அதிகாரிகள் உட்பட, சம்பந்தப்பட்டுள்ளதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருப்பதின் அடிப்படையில், மேலும் விசாரணை நடத்தப்படுவது அவசியம் என்று ஏஜி அலுவலகம் கருதுகிறது.
இந்த ஆக்கமுறையான நடவடிக்கை தியோவின் மரணத்திற்கு யார் பொறுப்பு என்பதை வெளிப்படுத்தும் என்று தாம் நம்புவதாக ராம்கர்பால் கூறியதோடு, அவர் தொடர்ந்து இந்த வழக்கில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.