சீனப்பள்ளிகளுக்கு (எஸ்எம்பிசி) மானியம் இல்லை; கல்வி அமைச்சர் சாடப்பட்டார்

 

சீன சுயேட்சையான உயர்நிலைப்பள்ளிகளுக்கு (எஸ்எம்பிசி) மானியம் அளிக்கப்படாததற்காக கல்வி அமைச்சர் மாஸ்லி மாலிக்கை இரண்டு டிஎபி பிரதிநிதிகள் கடுமையாகச் சாடினர்.

இந்த நிலைப்பாடு பழைய பிஎன் மனப்பாங்கைப் போன்றிருக்கிறது என்று டிஎபி இளைஞர் பிரிவுத் தலைவர் வோங் கா வோ கூறினார்.

இன்று நாடாளுமன்றத்தில் வீ கா சியோங்கிற்கு (பிஎன்-ஆயர் ஹீத்தாம்) அளித்த எழுத்து மூலமான பதிலில் எஸ்எம்பிசி பள்ளிகள் தேசியக் கல்வி அமைவுமுறையின் கீழ் வரவில்லை. ஆகவே அவறுக்கு மானியம் கிடையாது என்று மஸ்லி கூறியிருந்ததைத் தொடர்ந்து இப்பிரச்சனை எழுந்தது.

இன்று மதியம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், வோங் பக்கத்தான் அரசாங்கம் எஸ்எம்பிசிக்கு ஆதரவு அளித்திருந்ததையும், யுஇசி சான்றிதழுக்கு அங்கீகாரம் கொடுத்திருந்ததையும் மஸ்லிக்கு நினைவுறுத்தினார்.

இது போன்ற பதில் வருத்தத்திற்குரியது, ஏனென்றால் இது பிஎன் காலத்திற்குச் செல்வதாகும். ஹரப்பானுக்கு அதிகாரம் அளித்த மக்கள் இதனை விரும்பவில்லை என்று அந்த ஈப்போ திமோர் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

2008 ஆம் ஆண்டில், அன்றைய பக்கத்தான் ரக்யாட் பேராக் மாநில அரசு ஒன்பது எஸ்எம்பிசி பள்ளிகளுக்கு 1,000 ஹெக்டர்ஸ் நிலத்தை அவற்றின் இயக்குனர் வாரியங்களுக்கு வழங்கிற்று. அதன் மூலம் அப்பள்ளிகள் சொந்த வருமானத்தைப் பெறவும், அரசாங்க நிதியை நம்பி இருக்காத நிலையை அடையவும் வழிவகுத்தது என்று அவர் மேலும் கூறினார்.

அதே சமயத்தில், பிஎன் ஆர்வம் காட்டாத ஸ்கோலா அஹாமா ராக்யாட்டிற்கும் 1,000 ஹெக்டர்ஸ் நிலம் வழங்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

பின்னர், சரவாக் அரசு 2,000 ஹெக்டர்ஸ் நிலத்தை எஸ்எம்பிசி பள்ளிகளுக்கு அளித்ததையும், பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநில அரசுகள் அப்பள்ளிகளுக்கு வருடாந்திர மானியம் வழங்கியதையும் வோங் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சரின் எழுத்து மூலமான பதில் பிஎன் காலத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறதே தவிர சீர்திருத்தத் திட்டங்களைப் பிரதிபலிக்கவில்லை என்றாரவர்.

எஸ்எம்பிசி தேசியக் கல்வி அமைவுமுறையின் ஓர் அங்கமாக அங்கீகரிக்கப்படாததால், அரசாங்கம் இப்பள்ளிகளுக்கு நிதி உதவியை மறுக்கக்கூடாது என்று கூறிய வோங், இந்த விவகாரத்தைத் தீர்ப்பதற்கு மஸ்லிக்கு உதவ அவரும் இதர பின்னிருக்கை உறுப்பினர்களும் தயாராக இருப்பதாக மேலும் கூறினார்.

மஸ்லிக்கு பள்ளி காலணிகளின் நிறத்தை மாற்றத்தான் தெரியும்

மஸ்லிக்கு சில செல்வாக்குமிக்கவர்களின் பள்ளி மாணவர்களின் காலணியின் நிறம் மற்றும் கட்டணம் செலுத்தும் கணினி வகுப்புகளை இரத்து செய்தல் போன்ற புகார்களுக்கு மட்டுமே கவனம் செலுத்த தெரியும்; ஆனால் சீனக் கல்வியாளர்களை எப்படி கவனித்துக் கொள்வது என்பது அவருக்குத் தெரியாது என்று பெர்சாம் சட்டமன்ற உறுப்பினர் ஓங் பூன் பியாவ் கூறினார்.

ஏராளமான மலாய் மற்றும் இந்தியப் பெற்றோர்கள் அவர்களுடையக் குழந்தைகளை எஸ்எம்பிசிக்கும், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள யுஇசிக்கும் அனுப்புகிறார்கள்.

சில செல்வாக்குமிக்க பெற்றோர்களைவிட இப்பெற்றோர்கள் முக்கியத்துவத்தில் குறைந்தவர்களா என்று அவர் வினவினார்.

கல்வி அமைச்சர் ஹரப்பானைச் சேர்ந்தவர். ஆனால் அவரது பதில் கெடுதி செய்கிறது. மேலும் ஹரப்பான் பங்காளிகளுக்கு மதிப்பு அளிப்பதில்லை. இந்நிலைமை ஹரப்பானுக்குள் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் இன்னொரு அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், கல்வி அமைச்சராகத் தொடர்வதற்கு மஸ்லி பொருத்தமானவரா என்பதை பிரதமர் மகாதிர் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.