குழந்தை திருமண சிக்கல்களை அரசாங்கம் ஆக்கபூர்வமாக கையாள வேண்டும்

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், சிறார் திருமணச் சிக்கல்களைக் கையாள்வதில் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸலினா ஒத்மான் கூறியுள்ளார்.

காரணம், குழந்தை பாலியல் குற்றச் சட்டம் 2017-ன் கீழ், அதனைச் சமாளிக்க ஒரு விதியமைப்பு உள்ளது என்று அந்த முன்னாள் சட்ட அமைச்சர் தெரிவித்தார்.

“குழந்தை குற்றவியல் சட்டம் 2017 படி, குற்றம் செய்தவர் மீது குற்றஞ்சாட்டலாம். அந்தக் குழந்தைக்கு 11 வயதுதான்.

“குற்றவியல் சட்டத்தின் கீழ், சில பிரிவுகளின்படி, போலிசில் புகார் செய்யலாம், (குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்) மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் (சிறைவாசம்) தண்டனைக் கிடைக்கலாம்,” என்று அவர் கூறினார்.

அதற்கும் மேலாக, தங்கள் மகளை மணமுடிக்க அனுமதித்த தம்பதியினரும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அஸலினா கூறினார்.

எனவே, சட்டத்தில் இருக்கும் வாய்ப்பை அரசாங்கம் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.

“இந்தப் பிரச்சனையில் அரசாங்கம் இன்னும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்,” என அவர் இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருத்தங்களைச் செய்ய அரசாங்கத்திற்குச் சவால்

அண்மையில், குவா மூசாங்கில் 41 வயது ஆடவர் 11 வயது சிறுமியைத் திருமணம் செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தற்போது, இஸ்லாத்தைச் சேர்ந்த 16 வயது பெண்ணும் 18 வயது ஆணும் திருமணம் புரிய ஷரியா நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறவேண்டும். இஸ்லாம் அல்லாதவர்கள், தங்கள் மாநில மந்திரி பெசார் அல்லது முதலமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டும்.

கூடுதலாக, குழந்தைகளுக்கான பாலியல் குற்ற நீதிமன்றம் மூடப்படும் சாத்தியமுண்டு என்ற வதந்திகள் பற்றியும் அஸலினா கருத்து தெரிவித்தார்.

அரசாங்கம் உணர்ச்சி அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது, அந்நீதிமன்றம் மூடப்படக்கூடாது என்று அஸலினா நம்பிக்கை தெரிவித்தார்.

“அந்த நீதிமன்றங்கள் மூடப்படுவது சரியல்ல, குழந்தைகளுக்குச் சிறப்பு நீதிமன்றமும் சிறப்பு நீதிபதியும் தேவை,” என்றார் அஸலினா.

இதற்கிடையில், ​​சட்ட சீர்திருத்தம் (திருமணம் மற்றும் விவாகரத்து) (எல்.ஆர்.ஏ.) பிரிவு 88A-ல் தீர்மானம் கொண்டுவரும் படியும் அரசாங்கத்திற்கு அஸலினா சவால்விடுத்தார்.

“சட்டம் (பிரிவு) 88A-இல், முன்பு ஹராப்பான் மிகவும் ஆர்வமாக இருந்ததால், அது பற்றி நான் கேட்க விரும்புகிறேன். தற்போது அவர்கள் ஆட்சி அமைத்துள்ளதால், இச்சட்டப்பிரிவில் மாற்றங்கள் கொண்டுவருவது அவர்களுக்கு இலகுவாக இருக்கும்,” என அஸலினா தெரிவித்தார்.

எல்.ஆர்.ஏ. சட்டம் 88A பிரிவு, பெற்றோர்கள் விவாகரத்தாகும்போது, குழந்தைகள் எந்த மதத்தில் இருக்கிறார்களோ அதே மதத்தில் நிலைத்து இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இச்சட்டம் குழந்தைகள் ஒருதலைபட்சமாக மதம் மாற்றப்படுவதையும் தடுக்கிறது.

பிரிவு 88A (1) கூறுகிறது: “இருதரப்பினர் அனுமதித்தால் மட்டுமே, அக்குழந்தை இஸ்லாம் மதத்தைத் தழுவலாம் என்றும், 18 வயதை அடைந்த பின்னர், அக்குழந்தை தான் விரும்பும் மதத்தை ஏற்கலாம் என்றும் கூறுகிறது.”

பெடரல் அரசியலமைப்பின் 12(4) பிரிவை, அச்சட்டம் மீறுவதாகவும் கூறப்படுகிறது: “18 வயதிற்கு உட்பட்ட ஒரு நபரின் மதம் தனது பெற்றோரால் முடிவு செய்யப்பட வேண்டும்.”

சிலர் இந்த பிரிவில் உள்ள ‘பெற்றோர்’ எனும் வார்த்தை பெற்றோரில் ஒருவரின் முடிவு ஒரு குழந்தையின் மதத்தைத் தீர்மானிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.