நாட்டின் ஆக்கபூர்வமான வெற்றிக்கு அனைவரும் ஒன்றுபட்டுச் செயல் படுவோம், சேவியர்

 

அனைத்து மலேசியர்களுக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள், நாடு சுதந்திரமடைந்து 61 ஆண்டுகாலம்  ஆகிவிட்டாலும், பல இளம் மலேசியர்கள் பாரிசான் ஆட்சியிலிருந்து விடுபட்ட இவ்வாண்டு மே 9 யையே  சுதந்திர நாளாகவும், இவ்வாண்டின் சுதந்திரத் தினத்தையே உண்மையான முதல் விடுதலை நாளாகக் கொண்டாடுவதாகக்  கூறுகின்றனர்.

இப்படிப்பட்ட கருத்துகளைச் செவிமடுப்பது ஒன்றும் புதியதல்ல, 40 ஆண்டுகளுக்கு முன்பே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிற்சங்கவாதியுமான டாக்டர் வி. டேவிட் அவர்கள், மலேசிய இந்தியர்களுக்கு வராத சுதந்திரம் பற்றி எழுதியுள்ளார். ஆக, நாடு அடைந்த சுதந்திரத்தின் உண்மையான நோக்கம் நிறைவேறவில்லை, அதன் பயன் மக்களைச் சென்று சேரவில்லை, என்பதே அதன் பொருளாக அமைந்துள்ளது.

ஆக, இரண்டாம் முறையாக இப்பொழுது நாம் பெற்றுள்ள சுதந்திரத்தையாவது, எல்லாப் பிரிவு மக்களும், குடிமக்கள் முதல் அரசர்கள் வரை, எல்லாச் சமயத்தினரும், எல்லா இன மலேசியர்களும் கொண்டாடும் வண்ணம், நாம் மலேசியர்கள் என்று பெருமைப்படும் வகையில் அமைக்க வேண்டிய பெரிய பொறுப்பும், கடமையும் அரசாங்கத்திற்கு மட்டுமன்றி இந்த அரசியல் மாற்றத்திற்கு வித்திட்ட எல்லா மக்களுக்கும் உண்டு.

இந்த மாபெரும் பணியை மேற்கொள்ளச் சிறந்த ஆயுதம் தேவை, அதனைக் கையாள அறிவும், ஆற்றலும் கொண்ட நன்மக்கள் தேவை. அதனைப் பூர்த்தி செய்யும் ரீதியில் புதிய அரசாங்கமும் அதன் நடவடிக்கைகளைத் தேசப் பற்றும், அனுபவமும், ஆற்றலும் கொண்ட ஒரு சீரிய தலைவரின் ஆளுமையின் கீழ் மக்களுக்குப் பணி புரிந்து வருகிறது.

அரசாங்கம் முழு அரசியல் அரங்கமாக ஆகிவிடக் கூடாது என்பதால், பல பொது மக்கள், தொழில் நிபுணர்கள், கல்விமான்கள், பொருளாதார மேதைகள், ஊடகலாளர்கள், சட்ட வல்லுநர்கள், இளைஞர்கள், பொது நல அமைப்புகளைச் சார்ந்தவர்களையும் கொண்டு அரசாங்கம் இயக்கப்படுகிறது. மேற்கண்ட நிபுணர்களுக்குச் செனட்டர், அமைச்சர், சட்டத்துறைத் தலைவர், பொருளாதார அமைப்புகளின் மேலாளர் போன்ற பல பதவிகளும்  வழங்கப்பட்டுளனன.

நாட்டில் மிகவும் மதிக்கப்பட்ட முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் காலத்தில் கூட அமைச்சரவையில் 2 இந்தியப் பிரதிநிதிகளே இருந்தனர். ஆனால் இன்று அமைச்சரவையில் நால்வர் என்பதே இந்தியர்களின் கோரிக்கைகளுக்கு இன்றைய அரசு வழங்கும் முக்கியத்துவத்தின் சான்றாகும்.

அடையாளப் பத்திர விவகாரம், நிதி நிர்வாகம் போன்ற சில சட்ட சிக்கல் நிறைந்துள்ள விவகாரங்களைக் களைய சில மாற்றுவழிகள் ஆராயப்பட்டு வருவதால், நாம் வழங்கிய 100 நாள் காலத்திற்குள் சில திட்டங்களை அமல்படுத்த முடியாமல் இருக்கலாம்.  இந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண தடையாக இருக்கும் அரசாங்க சேவையிலிருப்பவர்கள்  பதவி நீக்கம் செய்வது முதல் வேறு பல மாற்றங்களை முன்னெடுத்த வண்ணம் இன்றைய அரசாங்கம் செயல் பட்டுவருவதை மக்கள் உணராமலிருக்க முடியாது..

ஆனால், இந்த மாற்றம், இந்த வெளிப்படைத்தன்மை, சுதந்திரத்தை, மக்கள் நலன் திட்டங்களைச் செயல்படுத்த, அதன் பயனை மக்கள் அனுபவிக்க, அனைவரும் அமைதியாக, அரசாங்கத்திற்கு இன்னும் சில காலம் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். அதுவே நாம் பெற்ற சுதந்திரத்தை வெற்றிகரமாகத் தற்காக்கவும், நாமும் நாடும் முன்னேறவும் வழியமைக்கும் என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.