முன்னாள் ராக்கெட் தலைமைச் செய்தி ஆசிரியரை பெர்னாமா தலைவராக்குவது சரியல்ல- ரயிஸ் யாத்திம்

டிஏபி செய்தித்தாளான ராக்கெட்டின் தலைமைச் செய்தி ஆசிரியர் பெர்னாமா தலைவராக்கப்படுவார் என்று ஆருடங்கள் கூறப்பட்டுவரும் வேளையில் அம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோவைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“அது சரியான தேர்வல்ல” என்று குறிப்பிட்ட அந்த பெர்சத்து உறுப்பினர் தேசிய செய்தி நிறுவனத்துக்கு வான் ஹமிடி ஹமிட்டைத் தலைமைச் செயல் அதிகாரியாக்கும்   விவகாரம் அரசியலாக்கப்படும் என்றார்.

“இப்போது தொடர்பு, பல்லூடக அமைச்சராகவுள்ள என் நண்பர்(கோபிந்த்) அம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”, என்றாரவர்.

“இப்படிப்பட்ட போக்கை நாம் தவிர்க்க வேண்டும். தவறினால், அந்த நிறுவனம் அரசியலாக்கப்பட்டு அதன் சிந்தனையும் செயல்களும் அரசியலாக்கப்படும்.

“அதனால்தான் இது சரியான தேர்வு அல்ல என்கிறேன். பெர்னாமா ஒரு நடுநிலை நிறுவனம் என்பதால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”, என்று ரயிஸ் கேட்டுக்கொண்டார்.

ரயிஸ் யாத்திம் 2009-இலிருந்து 2013வரை தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.