போர்ட் டிக்சன் இடைத் தேர்தல் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது அந்தந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
ஆனால், முகம்மட் சைபூல் புகாரியின் பெயர் குறிப்பிடப்பட்டபோது மட்டும் கூடியிருந்த பக்கத்தான் ஹரப்பான் ஆதரவாளர்கள் ஏளனமாகக் கூச்சலிட்டனர்.
அவரின் பெயரைத் தேர்தல் அதிகாரி குறிப்பிட்ட ஒவ்வொரு முறையும் அவர்கள் ஏளனம் செய்தார்கள்.
சைபூல், ஹரப்பான் வேட்பாளர் அன்வார் இப்ராகிமிடம் உதவியாளராக இருந்தவர். இவர்தான் அன்வார்மீது குதப்புணர்ச்சி குற்றஞ்சாட்டி அவரைச் சிறைக்கு அனுப்பியவர்.
அன்வார் அது அரசியல்வாதிகளால் ஜோடிக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டு என்றுதான் இன்னமும் கூறி வருகிறார். மே 16-இல் பேரரசர் சுல்தான் ஐந்தாம் முகம்மட் அன்வாருக்கு முழு மன்னிப்பு வழங்கினார்.