நஜிப் அம்னோவிடம் சொல்கிறார்: திருந்துக அல்லது ஒர் அரபு எழுச்சியை எதிர்கொள்க

அம்னோ சீர்திருத்த முயற்சிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அரபு எழுச்சி பாணியிலான புரட்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அந்தக் கட்சியிடம் மன்றாடியிருக்கிறார்.

“நீங்கள் நீண்ட காலத்துக்கு எத்தகையை இடையூறும் இல்லாமல் ஆட்சியில் இருந்து விட்டால் அரசியலில் உங்களை யாரும் அசைக்க முடியாது என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. என்ன நடந்தாலும் நீங்கள் அதிகாரத்தில் இருப்பீர்கள் என்ற எண்ணமும் உங்கள் மனதில் உருவாகி விடுகிறது.”

“ஆனால் நீங்கள் எவ்வளவுதான் வெற்றி பெற்றிருந்தாலும் அல்லது உங்கள் முயற்சிகளால் நாடு எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருந்தாலும் நாட்டின் இன்றைய வடிவமைப்பு வேறானது.”

“இன்றைய வாக்காளர்களும் மக்களும் இன்றும் எதிர்காலத்திலும் என்ன நடக்கும் என்பதை அறிய விரும்புகின்றனர்,” என அம்னோ பொதுப் பேரவைக்கு முந்திய அனைத்துலக கருத்தரங்கில் நஜிப் கூறினார்.

மத்திய கிழக்கில் பரவியுள்ள அரபு எழுச்சியை எடுத்துக்காட்டிய பிரதமர், அம்னோ மாறவேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் என்றார்.

“இதுதான் உண்மை நிலை. அரபு எழுச்சியின் அடிப்படையில் என்ன நிகழ்ந்தது என்பதை சிந்தியுங்கள். ஒர் ஆண்டில் மட்டும் 4 ஆட்சிகள் மாறியுள்ளன.”

‘மாற்றம் தொடங்கி விட்டது’

தமது அரசாங்கம் தனது உருமாற்றத் திட்டங்கள் மூலம் மாற்றத்திற்கான பாதையில் ஏற்கனவே சென்று கொண்டிருப்பதாக நஜிப் உறுதியாக நம்புகிறார்.

“அரபு எழுச்சியின் அடிப்படையிலும் மற்ற பல நாடுகளிலும் நிகழ்ந்தவற்றைப் பார்க்கும் போது கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு மாற்றங்கள் வருவதைக் காண முடியும். ஆனால் மலேசியாவில் மேல் நிலையிலிருந்து கீழ் நிலைக்கு மாற்றங்கள் செல்வதை நீங்கள் உணர முடியும்.”

“நாங்கள் மக்களுக்குச் செவி சாய்க்கிறோம் என்பதே  மேல் நிலையிலிருந்து கீழ் நிலைக்கு என்று சொல்வதின் அர்த்தமாகும். எது சிறந்தது என்பது அரசாங்கத்துக்கு மட்டுமே தெரியும் என்ற காலம் மலையேறி விட்டது என சொன்னதின் மூலம் நான் அதனைத் தொடங்கி விட்டேன். நாம் மக்களுடைய உணர்வுகளை அறிய வேண்டும்.”

நஜிப், தமது உருமாற்றத் திட்டங்களையும் தற்காத்துப் பேசினார். மாற்றங்கள் ஒரே நாளில் வந்து விடாது என்றார் அவர்.

“அம்னோ மறு தோற்றம் பெறுகிறது என்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம். அம்னோ மீண்டும் முன்னுக்கு நிற்கிறது.”

“நாட்டுக்கு நாங்களே சிறந்தவர்கள்”

என்றாலும் அந்த உருமாற்றத் திட்டங்கள் தொடருவதற்கு அம்னோவும் பிஎன் -னும் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியமாகும்.”

“நமக்கு சிறிய சவால் ஒன்று காத்திருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலில் நாம் பாலத்தைக் கடக்க வேண்டும். உண்மையான உருமாற்றத்தைக் கொண்டு வர நாம் மீண்டும் தேர்வு செய்யப்படுவது மிக மிக முக்கியமாகும்.”

“நமக்கு மக்களுடைய ஆதரவு தேவை. அதற்காக நாம் வேலை செய்து அவர்களுக்கு காட்ட வேண்டும். அது கடந்த காலத்தில் நாம் செய்தது அல்ல. காரணம் இப்போதும் எதிர்காலத்துக்கும் நாட்டுக்கு நாமே சிறந்தவர்கள்.”

“உலக நெருக்கடியில் மூழ்கியுள்ள கால கட்டத்தில் பொருளாதார சமூக உருமாற்றத்துக்கான அரசியல்” என்னும் தலைப்பில் அந்தக் கருத்தரங்கு நடைபெறுகிறது. அதில் உலகம் முழுவதையும் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட தூதர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

TAGS: