பினாங்கு ஊராட்சிமன்ற தேர்தலை நடத்தத் தயார், முடிவு பெடரல் அரசைப் பொறுத்தது

 

பினாங்கு மாநிலம் ஊராட்சிமன்ற தேர்தல்களை நடத்தத் தயாராக இருக்கிறது, முடிவு பெடரல் அரசாங்கத்தைப் பொறுத்துள்ளது என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோ கூறுகிறார்.

ஊராட்சிமன்ற தேர்தல்களை மீண்டும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை பினாங்கு மாநில அரசு கடந்த சில ஆண்டுகளாக எடுத்து வந்துள்ளது. ஆனால், பலனில்லை.

இப்போது பெடரல் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சௌ இன்று ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

இன்று முன்னேரத்தில், பிரதமர் மகாதிர் ஊராட்சிமன்ற தேர்தல்கள் நடத்தும் திட்டம் இல்லை என்று கூறினார். அது இனச் சச்சரவுகள் மற்றும் கிராமப்-நகர்ப்புற அகண்ட
பிளவுகளுக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

ஊராட்சிமன்ற தேர்தல்களை மீண்டும் நடத்துவதற்கு பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கை வாக்குறுதி அளிக்கவில்லை. ஆனாலும் பல ஹரப்பான் தலைவர்கள் அதை நீண்டகாலமாக கோரி வந்துள்ளனர்.

ஊராட்சிமன்ற தேர்தல்கள் கடைசியாக 1965 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.