அம்னோ பொதுப் பேரவை இன்று பிற்பகல் தலைவர் செய்தியுடன் தொடங்குகிறது

2011ம் ஆண்டு அம்னோ பொதுப் பேரவை, இன்று பிற்பகல் பேரவைக்கு முந்திய மன்றக் கூட்டத்துடன் தொடங்குகிறது. அந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் பேராளர்களுக்கு முக்கியமான செய்தியை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

13வது பொதுத் தேர்தலுக்கு அம்னோ தயாராவதற்கு மிக முக்கியமான செய்தியாக தலைவர் உரை அமைந்திருக்கும் என பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இன்றிரவு 9 மணிக்கு மகளிர், இளைஞர், புத்ரி பிரிவுகளின் பேரவைகளை துணைத் தலைவர் முஹைடின் யாசின் ஒரே நேரத்தில் தொடக்கி வைப்பார்.

முஹைடின் இன்று பிற்பகல், உலகம் நெருக்கடியில் மூழ்கியுள்ள வேளையில் பொருளாதார சமூக உருமாற்றத்துக்கான அரசியல் என்னும் தலைப்பில் நடைபெறுகின்ற அனைத்துலக கருத்தரங்கை நிறைவு செய்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 5,447 பேராளர்கள் அம்னோ பொதுப் பேரவையில் கலந்து கொள்கின்றனர். அவர்களில் 2,627 பேர் 191 அம்னோ தொகுதிகளைச் சார்ந்தவர்கள். 944 பேர் மகளிர் பிரிவையும் 942 பேர் இளைஞர் பிரிவையும் 934  பேர் புத்ரி பிரிவையும் சார்ந்தவர்கள்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல அந்நிய அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளை அனுப்பியுள்ளன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அறுவர் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த 58 அந்நியப் பேராளர்கள் பங்கு கொள்கின்றனர். மடகாஸ்காரில் உள்ள மாமாபிசோ கட்சியைச் சேர்ந்த 11 பேரும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த மூவரும் லத்தீன் அமெரிக்க கரிபியன் நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளின் நிரந்தர மாநாட்டைச் சேர்ந்த இருவரும் மற்றவர்களில் அடங்குவர்.

வெளிநாடுகளில் இயங்கும் 74 அம்னோ மன்றங்களும் பிரதிநிதிகளை அனுப்பியுள்ளன.

அம்னோ பொதுப் பேரவை நிகழ்வுகள் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதற்காக 74 உள்நாட்டு ஊடக அமைப்புக்களையும் 9 அனைத்துலக செய்தி நிறுவனங்களையும் சார்ந்த மொத்தம் 1,540 ஊடகவியலாளர்கள் கூடியுள்ளனர்.

பெர்னாமா