1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தங்கள், அருள் கந்தா மீது குற்றச்சாட்டு

1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையின் திருத்தங்கள் தொடர்பில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குடன் இணைந்து சதியில் ஈடுபட்டார் என்று, 1எம்டிபியின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அருள் கந்தா கந்தசாமி மீது, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆயினும், நீதிபதி ரோசினா அயோபிற்கு முன்னிலையில், அவருக்கு எதிராக குற்றம் வாசிக்கப்பட்ட போது, அருள் கந்தா, 42, தனக்கெதிரான குற்றச்சாட்டை மறுத்தார்.

1எம்டிபி தொடர்பில், மலேசியப் பிரதமராகப் பதவி வகித்த நஜிப், 65, தனது பதவியைப் பயன்படுத்தி இலஞ்சம் பெறுவதில், அருள் கந்தா உறுதுணையாக இருந்து சதிவேலை செய்தார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தேசியப் பொது கணக்குக் குழுவிடம் (பிஏசி) தாக்கல் செய்யும் முன்னர், தனக்கு சாதகமாக அமையும் வகையில், 1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தங்கள் செய்ய, தனது பதவியைப் பயன்படுத்தி கட்டளையிட்டார் என நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பிப்ரவரி 22 மற்றும் 26, 2016-க்கு இடைப்பட்ட காலத்தில், புத்ராஜெயா, மத்திய அரசு நிர்வாக மையத்தில் உள்ள பிரதமர் துறை வளாகத்தில் அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாக கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 2009-இன் பிரிவு 28 (1) (சி) பிரிவு, அதே சட்டப் பிரிவு 23 (1) மற்றும் பிரிவு 24 (1) கீழ், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்; இலஞ்சம் பணமாக இருப்பின், அதன் மதிப்பீட்டில் 5 மடங்காக அல்லது RM10,000 என எது அதிகபட்சமோ அது தண்டனையாக வழங்கப்படும்.

பெடரல் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கோபால் ஸ்ரீ ராம், மூத்தத் துணைப் பொது வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட வேளை, அருள் கந்தா சார்பில் வழக்கறிஞர் என். சிவநந்தன் ஆஜரானார்.

-பெர்னாமா