பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், நாடாளுமன்றத்தில் எவரையும் தன்னால் சந்திக்க முடியும் என்றும், மாற்றத்திற்கு ஆதரவளிப்பவருடன் கலந்துரையாட தான் திறந்த மனதுடன் இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில், பாடாங் ரெங்காஸ் எம்பி நஸ்ரி அஸீஸ்-உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக, மலேசியாகினி வெளியிட்ட செய்தி தொடர்பில், ஊடகங்கள் எழுப்பியக் கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
“கிட் சியாங் தவிர்த்து, அம்னோ, பாஸ் மற்றும் வாரிசான் பிரதிநிதிகளையும் நான் சந்திக்கிறேன். கூட்டத்திற்கு முன்னதாக கலந்துபேசுகிறோம், அனைவரின் ஆதரவும் வேண்டும் என்பது பற்றி கலந்துபேசுகிறோம், கட்சியில் சேர வலியுறுத்தியல்ல, மாற்றத்திற்கு அனைவரின் ஆதரவும் தேவை,” என்று இன்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் சந்தித்தபோது அவர் சொன்னார்.
முன்னதாக, அன்வாரிடம் 4 விஷயங்கள் பற்றி கலந்துபேசியதாக நஸ்ரி தெரிவித்தார்.
அதில், அம்னோவைக் கலைக்க வேண்டாம் என்றும், அன்வார் பிரதமராக பதவியேற்றால் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அநீதி விளைவிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டதாக நஸ்ரி தெரிவித்தார்.
“அது ஏமாற்றுவதாக அர்த்தமல்ல, மாறாக நாட்டில் இன்று பெரிய பண இழப்பு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால், அவரை விசாரணை செய்ய வழக்கறிஞர்களுக்கு அடிப்படை விஷயங்கள் இருக்க வேண்டும்.
“அக்குற்றச்சாட்டுகளில் நஜீப் பொறுப்பாளியாக இருப்பின், அவரைக் குற்றஞ்சாட்ட வேண்டியது அரசாங்கத்தின் கடமை, அவரைத் தண்டிக்கும் அரசாங்கத்தின் முடிவை நான் ஆதரிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.