பாஸ் எம்பி: குவான் எங்கைப் போல் குற்றங்களிலிருந்து விடுபட அம்னோ தலைவர்கள் ஹரப்பானில் சேர்கிறார்கள்

அம்னோ தலைவர்கள் பக்கத்தான் ஹரப்பானில் சேர்வதற்கு கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். எதற்கு என்றால், தங்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்குத்தான் என்கிறார் பாஸ் எம்பி சே அப்துல்லா மாட்.

அதே மூச்ச்சில் டிஏபி தலைவர் லிம் குவான் எங்கையும் ஜாடையாக சாடினார்.

“குற்றங்களிலிருந்து விடுபடவும் லிம் குவான் எங்கைப் போல் புனிதராவதற்கும் ஹரப்பானில் சேர்வதுதான் எளிய வழி”, என்றாரவர்.

இப்போது நிதி அமைச்சராக உள்ள லிம்மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் அமைத்ததும் கைவிடப்பட்டதை தும்பாட் எம்பியான சே அப்துல்லா சுட்டிக்காட்டினார்.

அம்னோ தலைவர்கள் நெருக்குதலுக்கு ஆளாகி இருப்பதைத் தாம் உணர்வதாகவும் அவர் கூறினார்.

“அவர்கள் அமைச்சர்களாக இருந்தபோது சிறிய, பெரிய தவறுகள் இழைத்திருக்கலாம், ஊழல் செய்திருக்கலாம் . அதற்காக அவர்கள் இப்போது மிரட்டப்படுகிறார்கள், வேட்டையாடப்படுகிறார்கள்.

“எனவே, தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் கட்சித் தாவுகிறார்கள்”, என ஹராக்கா ஆன்லைன் கட்டுரை ஒன்றில் சே அப்துல்லா கூறினார்.

பாஸ் கட்சியினர் அப்படிச் செய்ய மாட்டார்கள் என்றாரவர்.

“எங்கள் எம்பிகள் கைச்சுத்தமானவர்கள். அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அழுத்தம் கிடையாது. எங்கள் போராட்டம் அமைச்சர் பதவிக்காகவோ அதிகாரத்துக்காகவோ அல்ல, கொள்கைகளுக்காக”, என்றார்.