முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் உடனே சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்- பெர்சத்து

பெர்சத்து தலைமைச் செயலாளர் மர்சுகி யாஹ்யா, அக்கட்சியில் சேர்வதற்கு மனுச் செய்யும் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைவர்களும் உடனே சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவர்களைச் சேர்த்துக் கொள்வதா நிராகரிப்பதா என்பதை முடிவு செய்ய ஒரு மாதமாகலாம், ஓர் ஆண்டுகூட ஆகலாம் என்றாரவர்.

“கட்சியில் சேர்ப்பதற்குமுன் அவர்கள் தப்பான செயல்களில் ஈடுபட்டவர்களா என்பதைக் கண்டறிய அவர்களின் விண்ணப்பங்கள் எம்ஏசிசி-இடமும் போலீசிடமும் கொடுக்கப்படும்.

“அது முக்கியம். ஆரோக்கியமற்ற கலாச்சாரம் கட்சிக்குள் வந்து விடக்கூடாது, பாருங்கள். அவர்களின் பின்னணியை ஆராய ஒரு மாதம், இரண்டு மாதம் ஏன் ஓர் ஆண்டுகூட ஆகலாம். அவர்களைச் சேர்த்துக்கொள்ள நாங்கள் அவசரம் காட்டவில்லை”, என மர்சுகி நேற்று புத்ரா ஜெயாவில் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் கூறினார்.