பிகேஆர் உறுப்பினர் லத்தீபா கோயா, தனக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் புகாரைக் கண்டித்தார்.
“என் வாயைக் கட்டுவதற்குக் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோருவது ஒரு வெறுக்கத்தக்க அம்னோ தந்திரம்.அது வெற்றி பெறாது”, என்றவர் மலேசியாகினிக்கு அனுப்பிய அறிக்கை ஒன்றில் கூறினார்.
லத்தீபாமீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கிள்ளான் மற்றும் இந்திரா மக்கோடா பிகேஆர் தொகுதிகள் பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் புகார் பதிவு செய்துள்ளன.
அன்வார், தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் வேண்டியவர்களாகவும் பார்த்து மாநிலத் தலைவர்களாக நியமிக்கிறார் என்று லத்தீபா பகிரங்கமாகக் குறை கூறியதன் தொடர்பில் அவருக்கு எதிராக அப்புகார் செய்யப்பட்டது.
அவர் முறையான வழிகளில் சொல்ல வேண்டியதைச் சொல்லி இருக்கலாம் என்று புகார்தாரர்கள் குறிப்பிட்டனர்.
தன்னைத் தற்காத்துப் பேசிய லத்தீபா பொதுநலன் கருதியே அவ்வாறு கூறியதாக சொன்னார்.
“கூட்டரசு அரசாங்கத்தை ஆளும் கூட்டணியின் மிகப் பெரிய கட்சியில் குடும்பத்தினருக்கும் வேண்டியவர்களுக்கும் சலுகை காட்டும் போக்கு நிலவுவதைக் காணக் கவலையாக உள்ளது. எனவே, இது பொதுநலன் சார்ந்த விவகாரம்தான்”, என்றவர் கூறினார்.