‘செடிக்’ ‘மித்ரா’வாக பெயர் மாறுகிறது

மலேசிய இந்திய சமுதாயத்திற்கு, குறிப்பாக அரசு சாரா இந்திய அமைப்புகளுக்கு அண்மைய ஆண்டுகளில் நன்கு அறிமுகமான ‘செடிக்’ அமைப்பு, ‘மித்ரா’ என்று பெயர் மாற்றம் காண்கிறது என்று அதன் தலைமை இயக்குநர் ச.லெட்சுமணன் அறிவித்துள்ளார்.

இந்திய சமுதாயத்தின் நலம் கருதி பிரதமர் துறையின்கீழ் உருவாக்கப்பட்ட ‘சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவான செடிக், நாடும் சமூகமும் மாற்றம் கண்டுள்ளதற்கு ஏற்ப செடிக்கும் மாற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

மலேசிய இந்திய சமுதாயத்தில் எந்தப் பிரிவினரின் மேம்பாட்டை இலக்கு வைத்து செடிக் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த இலக்கு எட்டப்படுவதன் அடிப்படையில் தன் நோக்கையும் போக்கையும் மாற்றிக் கொண்ட ‘செடிக்’, தற்பொழுது தன் பெயரையும் ‘தோழமை’, ‘எழுச்சி’ என்றெல்லாம் பொருள் கொண்ட  மித்ரா(MITRA-Malaysian Indian Transformation Unit) என்று மாற்றிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

கல்வி, பொருளாதார மேம்பாட்டுடன் இந்தியர்கள் சமூக மறுமலர்ச்சி காண்பதையும் நலிந்த மக்கள் கைதூக்கி விடப்படுவதையும் இலக்காகக் கொண்டு மித்ரா-வின் செயல்பாடு இருக்கும்.

இந்தியர்களின் கல்வி வளர்ச்சி, சமுதாய மறுமலர்ச்சி, பொருளாதார மேம்பாடு, வேலை வாய்ப்பு, அடையாள ஆவணம் உள்ளிட்ட பிரிவுகளை உள்ளடக்கி செயல்படும் மித்ரா, சில சிறப்புத் திட்டங்களையும் வகுத்துள்ளது.

 மொத்தத்தில், பெயரை மட்டும் மாற்றிக் கொள்ளாமல்,  பொருளாதார-கல்வி மேம்பாட்டை உள்ளடக்கிய சமுதாய மறுமலர்ச்சியையும் இலக்காகக் கொண்டு பிரதமர் துறையின்கீழ் செயல்படும் மித்ராவிற்கு இந்திய சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பும் ஆதரவும் நல்க வேண்டும் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் லெட்சுமணன் மேலும் தெரிவித்துள்ளார்.

 – நக்கீரன்