கடந்த மாதம், சுபாங் ஜெயாவில் உள்ள சீஃபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் கலவரம் தொடர்பில், ஒற்றுமை அமைச்சர் பி. வேதமூர்த்தி மீது முழு குற்றம் சாட்டுவது நியாயமல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் கூறியுள்ளார்.
அது, கடந்த வாரம் வியட்நாமில் நடைபெற்ற ஏ.ஃப்.ஃப். சுசூகி காற்பந்து இறுதியாட்டத்தில் மலேசியாவின் தோல்விக்கு, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சதிக் மீது குற்றம் சாட்டப்படுவது போலானது என்று, இன்று ஒரு பத்திரிக்கை அறிக்கையில் ராம் கர்ப்பால் கூறியுள்ளார்.
வேதமூர்த்தி பதவிவிலக வேண்டும் எனும் சைட் சத்திக்கின் ‘திறந்த அழைப்பு’ பற்றி கருத்துரைத்த போது, “அவர் மீது பொதுமக்கள் குறைகூறுவது என்பது வேறு, ஆனால் சக அமைச்சர்களிடமிருந்து இராஜினாமா செய்ய அழைப்பு விடுக்கப்படுவது என்பது வேறு விஷயம். நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும், ஓர் அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் எனும் ஒப்புதலுக்கு மாறாக அது உள்ளது.
“வேதமூர்த்தி கடிந்து கொள்ளப்பட வேண்டும் என்றாலும், அது பிரதமரிடமிருந்து வர வேண்டுமே தவிர, மற்ற அமைச்சர்களிடம் இருந்து அல்ல,” என்று அவர் கூறினார்.
உண்மையில், சைட் சதிக் வேதமூர்த்தி இராஜினாமாவுக்கு நேரிடையாக அழைப்பு விடுக்கவில்லை.
ஆனால், வேதாவைப் பதவி நீக்கம் செய்யக் கோரிய ஒரு மனுவைப் பிரதமரிடம் சமர்ப்பிக்க, பெர்சத்து இளைஞர்களுக்கு அவர் உதவியுள்ளார்.
முன்னதாக, அவர்கள் பிரதமரைச் சந்திக்க அந்த முவார் எம்பி ஏற்பாடு செய்து கொடுத்தார் என பெர்சத்து இளைஞர் பிரிவின் உல்யா அகாமா ஹுசன்னுடின் கூறியிருந்தார்.