தேர்தல்வழி பிரதமரைக் கவிழ்க்கலாம்- மாட் சாபு

பிரதமராக இருப்பவரைக் கவிழ்க்க முயல்வது வழக்கான ஒன்றுதான் என்று கூறும் அமனா தலைவர் முகம்மட் சாபு, பக்கத்தான் ஹரப்பான் உறுப்பினர்கள் அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபடுவது பற்றித் தமக்குத் தெரியாது என்கிறார்.

நேற்று ஜாசின் அமனா நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் கைருடின் அபு ஹசான், ஹரப்பானுக்குள்ளேயே டாக்டர் மகாதிர் முகம்மட்டைக் கவிழ்க்க சதி நடப்பதாகக் கூறியிருந்தார்.

நடப்பு அரசாங்கத்தில் பதவி கிடைக்காதவர்கள் அம்முயற்சியில் ஈடுப்பட்டிருப்பதாக கைருடின் கூறினார்.

அது குறித்துக் கருத்துரைத்தபோதுதான் முகம்மட் சாபு, “பிரதமரைக் கவிழ்க்கலாம் . ஆனால், தேர்தல் வழியாக அதைச் செய்ய வேண்டும், அதற்காகத்தானே எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. அது வழக்கமான ஒன்றுதான்”, என்றார்.

ஆனால், ஆளும் கட்சியில் இருப்பவர்களே அந்த முயற்சியில் ஈடுபடுவதாகக் கூறப்படுவது பற்றித் தமக்குத் தெரியாது என்றார்.

ஹரப்பான் தலைவர்கள் பகிரங்கமாக சர்ச்சையிட்டுக் கொள்வது குறித்தும் தற்காப்பு அமைச்சரிடம் வினவப்பட்டது.

“அது ஒரு பிரச்னை அல்ல. எங்கள் அரசியல் வெளிப்படையானது. குறை சொல்வோம், குறை சொன்னால் ஏற்றுக்கொள்வோம்… ஜனநாயகத்தில் அது சகஜம்தானே”, என்று பதிலளித்தார்.