‘பெர்சத்து, அம்னோ அகதிகளை எங்களின் உளமார்ந்த பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்’

அம்னோ துணைத் தலைவர் முகம்மட் கலீட் நோர்டின், முன்னாள் அம்னோ தலைவர்களை ஏற்றுக்கொண்ட பெரிபூமி பெர்சத்து மலேசியா கட்சிக்கு (பெர்சத்து) நன்றி தெரிவித்தார்.

இந்த ‘அம்னோ அகதிகள்’ வைரஸ் போன்றவர்கள், இதற்கு முன்னர் அம்னோவைச் சீரழித்தது போல, அவர்கள் பெர்சத்துவையும் அழிப்பார்கள் என்று அவர் கூறினார்.

“பெர்சத்து, நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துகொள்ள விரும்புகிறேன். எங்களின் உளமார்ந்த பரிசாக இந்த அம்னோ உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

“நம்புங்கள், இந்த அம்னோ உறுப்பினர்களின் புறக்கணிப்பு மற்றும் அவர்கள் பெர்சத்துவில் நுழைவது எங்களின் தூக்கத்தைப் பாதிக்காது, ஆனால் அவர்கள் கண்டிப்பாக உங்களைத் தூங்கவிட மாட்டார்கள்.

“அவர்கள் அம்னோ-ஐ காயப்படுத்தி, சிதைத்த வைரஸ்கள். அவர்கள் எங்கு இருந்தாலும், வலியும் வீழ்ச்சியும் ஏற்படுவது நிச்சயம்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 12-ல், சபா அம்னோவைச் சேர்ந்த சில மக்கள் பிரதிநிதிகளும் தலைவர்களும் கட்சியிலிருந்து விலகி, தங்களைச் சுயேட்சை வேட்பாளர்களாக அறிவித்தனர்.

அம்னோவுக்கு இனி எதிர்காலம் இல்லை என்று காரணம் கூறி, 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 9 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 21 தொகுதி தலைவர்கள், 2 செனட்டர்கள் உட்பட கட்சியிலிருந்து விலகினர்.

அதுமட்டுமின்றி, அவர்கள் அனைவரும் பிரதமர் டாக்டர் மகாதீருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, லாருட் எம்பி, ஹம்ஸா ஷைனுட்டின் தலைமையில், மேலும் 6 அம்னோ எம்பிக்கள், கட்சியிலிருந்து விலகினர்.

இந்தக் கொந்தளிப்புக்கு நடுவே, அம்னோ தலைவர் டாக்டர் அஹ்மத் ஜஹீட் ஹமிடி, துணைத் தலைவரான முகமட் ஹசானிடம் தனது பதவியை ஒப்படைத்து, ஓய்வெடுக்க முடிவு செய்தார்.

“ ‘பெர்சத்து’ என்று பெயரளவில் இருந்தாலும், உண்மையில் அது அம்னோ 2.0 அல்லது 3.0, பெயர் முக்கியமல்ல,” என்று முகமட் காலிட் கூறினார்.

“அவர்கள் பண அரசியல் கலாச்சாரத்தை நிச்சயம் கொண்டு வருவார்கள், அவர்கள் தாங்கள் நன்மை அடைய வசதி வாய்ப்புகளை தேடி அலைவார்கள்.

“கொஞ்சம் கொஞ்சமாக, பெர்சத்து கைமாறும். கொஞ்சம் கொஞ்சமாக பெர்சத்து உடைந்துபோகும். புதிய முகங்களை பெர்சத்து காணும், உண்மையான உறுப்பினர்களையும் ‘வந்தேறி’களையும் பெர்சத்து பார்க்கும்,” என்று அவர் அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.