இந்நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழ இடமுண்டு, சேவியர்

 

மலேசியர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்து தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்பண்டிகையின் சிறப்பே இருப்போர் இல்லாதவர்களுக்குத் தந்து உதவுவது மட்டுமின்றி அன்பை அனைவரிடமும் பரிமாறிக் கொள்வதில்தான் உள்ளது. அதற்கு ஏற்ப அனைத்து      கிறிஸ்த்துவ குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியான, கிறிஸ்துமஸ் தினமாக இன்றும் இனி என்றும் அமைய இறைவனைப் பிராத்திக்கிறோம்.

இந்த இனிய வேளையில் நமக்குக் கிடைக்கும் சௌபாக்கியங்கள் உலகெங்கும் வாழும் மக்கள் அனைவருக்கும் கிட்டவேண்டும். அதே போல் நாட்டின் வளமும் செழிப்பும் எல்லா மக்களையும் சென்றடைவதை உறுதிசெய்ய எல்லாச் சமயத்தினரும் ஒன்றுபட்டு பாடுபடுவதை நாமும் தொடர்ந்து பலப்படுத்த வேண்டும். ஏசு முதல் மற்ற எல்லா மதப் பெரியோர்களும் மக்களின் நல்வாழ்வுக்காகவே தங்களை அர்ப்பணஞ்செய்துக் கொண்டனர்.

அதுபோல் நாட்டு மக்கள் அனைவரும் அரும்பாடுபட்டு உருவாக்கிய மாற்றத்தின் பயன்  எல்லோருக்கும் கிட்ட வேண்டும். மக்கள் சிறப்பாக வாழ  அரசு வகுக்கும் திட்டங்களைத் திசை திருப்பவும், மக்களின் கவனத்தை இன, சமய உணர்வுகளின் மீது திருப்பி அதன்  கோர வெப்பத்தில் குளிர் காயச் சில குள்ளநரிகள் போடும் திட்டங்களுக்கு மக்கள் இரையாகமலிருக்க வேண்டும்.

நாட்டில் எல்லா மக்களுக்கும் ஒற்றுமையாக வாழ இங்கு இடமுண்டு, செழிப்புண்டு, மார்க்கம் உண்டு. ஆனால், உணர்ச்சிவசப்பட்டு நாம் செய்யும் சிறு தவறுகளும், பல இன நாட்டில் பெரிய வினையாக மாறிவிடும் என்பதை அறிந்தவர்கள் நாம். அதனால், நாம் இழந்தது இனிமையான வாழ்வு, கோடான கோடி செல்வங்கள். இன்றைய இளைஞர்கள் கடந்த காலப் படிப்பினைகளைப் பாடமாகக் கொள்ள வேண்டும்.

புதிய மலேசியா நமது பிள்ளைகளும் அவர்களின் தலைமுறைக்கும் மகிழ்ச்சியளிக்கும் அனைத்து வாய்ப்பும், வசதிகளையும் அளிக்க வல்லதாக உருவாக்க நாம் பாடுபட வேண்டும். அந்த பொறுப்பு நமக்குண்டு, சமத்துவமான தேசத்திற்குச் சரியான அடித்தளமிட இப்போதுள்ள வாய்ப்பினைத் தவறவிட்டால் எதிர்காலச் சந்ததி நம்மை மன்னிக்காது என்பதை மனதில் நிறுத்தி நாம் செயல் பட வேண்டும்.

நாட்டு மக்களிடையே ஒற்றுமையும், புரிந்துணர்வும் வளர அனைத்து வழிகளிலும், எல்லாப் பண்டிகைகளின் போதும் திறந்த இல்ல உபசரிப்புகளை நடத்தி வருகிறோம். அதனைத் தொடர்ந்து நடத்தி நாட்டின் மேம்பாட்டுக்கு உழைப்போம், உயர்வடைவோம். அனைவருக்கும் எனது சார்பிலும், பாக்காத்தான் ஹராப்பான் அரசின் சார்பிலும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.