ஊழல்  பெருச்சாளிகள்…!

  • கி.சீலதாஸ்.

வருமானம்  போதாது.  ஆனால்  மற்றவர்கள்  சிறப்பாக  வாழ்வதைப்  பார்த்து  புழுங்கி  அவர்களைப்போலவே  வாழவேண்டும்  என்ற  ஆசை  கொண்டவருக்கு  பாழ்நிலை  காத்திருக்கின்றது.  தம்முடைய  வருவாய்,  ஆடம்பர  வாழ்க்கைக்கு  உதவாதபோது  எப்படியாவது  அந்த  உயரிய  அந்தஸ்தை   அடைந்தாக  வேண்டும்  என  நினைப்பது  பேராசையாகும்.  இருப்பதை  வைத்து  திருப்தி  அடையாமல்  மேற்கொண்டு  பொருள்  சேர்க்க  நினைப்பது  பேராசை  என்ற  அர்த்தத்திற்கு  உட்பட்டதாகும். அரசு  அல்லது  தலைவர்கள்  அல்லது  வளமிக்க  அனைத்துலக  வணிக  நிறுவனங்களில்  பணிபுரிவோருக்கு  நல்ல  வருமானம்  உண்டு.  அதுபோதவில்லை  என்ற  நிலை  எதைக்  குறிக்கிறது?  விரலுக்குத்  தகுந்த  வீக்கம்  அங்கே  கிடையாது  என்ற  உண்மை  வெளிச்சமாகிவிடும்.

பொதுத்துறையில்  பணிபுரிவோர்  நாட்டை  பாதுகாக்கும்  பொறுப்பை  ஏற்றுள்ளனர்.  உதாரணத்திற்கு,  ஒரு  நாட்டுத்  தலைவன்  நேரடியாக  எதையுமே  நிர்வகிக்க  இயலாது.  நாட்டு  நிர்வாகம்  பலவாறு  பிரிக்கப்பட்டு  அது  செம்மையாக  செயல்படவேண்டும்  என்ற  அடிப்படை  நோக்கத்தோடு  தகுதிமிக்க  பொறுப்பானவர்களை  நியமிப்பது  இயல்பு.  அவ்வாறு  நியமிக்கப்பட்டவர்கள்  தூய  மனப்பான்மையோடு  நாட்டின்  நலனைக்   கருத்தில்  கொண்டு  செயல்படவேண்டியது  கட்டாயமாகும்.  இந்த  முறையைப்  பார்க்கும்போது  அரசு  பல  இலாக்காக்களை  உருவாக்கி   தகுதியானவர்களை  நிர்வாகத்தைக்  கவனிப்பதற்காக  நியமிக்கிறது.  இவ்வாறு  நியமிக்கப்படுவது  ஏன்?  இவர்கள்  உயர்மட்டத்திலிருந்து  கீழ்மட்டம்வரை- அரசு  பொறுப்பில்  இருப்பதால்  அவர்கள்  நாட்டு  நலனிலும்  பாதுகாப்பிலும்  கரிசனத்துடன் செயல்படுபவர்கள்  என்ற  நம்பிக்கை.  இவ்வாறு  பொறுப்புகளை  ஏற்றவர்கள்  என்ன  செய்ய  வேண்டும்?  தங்களின்  வருமானத்திற்கு  அப்பால்  வாழ  நினைக்கக்கூடாது.  அரசு  ஊழியர்கள்  கையூட்டு(லஞ்சம்)  கலாச்சாரத்தில்  மூழ்கி  நாட்டை அழித்துவிடக்கூடாது  என்ற  நோக்கத்தில்  கிரேக்க  மன்னன்  ஒருவன்  நாட்டின்  பணம்  எப்படி  இருக்கவேண்டும்  என்ற  சிந்தனையில்  ஆழ்ந்து,  நாட்டின்  காசு  உலோகத்தால்  செய்யப்பட்டதாக இருக்கவேண்டும்,  அது  ஒரு  தேர்  வண்டி  சக்கரத்தின்  அளவு  பெற்றிருக்கவேண்டுமென  தீர்மானித்தானாம்.  ஏன்  தெரியுமா?  லஞ்ச  கலாச்சாரத்தைத்  தடுக்கும்  பொருட்டு  இப்படி  ஒரு  திட்டம்  பலனளிக்கும்  என  அவன்  நம்பினான்.  அப்பொழுது  காகித  நாணயம்  நினைக்கப்படாத  காலம்.

காகித  நாணயம்  பொது  காலத்தின்  618-907  ஆண்டுகாலத்தில்தான்   சீனாவில்  முதலில்  பயன்படுத்தப்பட்டது.  பதினேழாம்  நூற்றாண்டில்  ஐரோப்பிய  நாடுகளில்  காகித  நாணயம்  அறிமுகமாயிற்று.  பண்டைகால  நாணயங்கள்  யாவும்  உலோகத்தால்  செய்யப்பட்டவையாகும்.  இந்த  நாட்டில்  ஐரோப்பியர்களின்  ஆதிக்கம்  பெருகிய  காலகட்டத்தில்  ஸ்பெயினின்   தங்க  நாணயம்தான்  பயன்படுத்தப்பட்டது.  சுல்தான்களுக்கு  வரி  கட்டுவது,  சலுகைகளைப்  பெறுவதற்கு   ஸ்பெயினின்  தங்க  நாணயம்  பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு  உலோகத்தால்  செய்யப்பட்ட  காசுகள்  நாட்டின்  நாணயமாக  நீடித்திருந்தால்  ஒருவேளை  லஞ்சமாகப்  பெற்றவற்றை  மறைத்துவைக்க  சிரமமாக  இருந்திருக்கும்.  பல்லாயிரம்  ஆண்டுகளுக்கு   முன்பு  கிரேக்க  மன்னன்  கணித்த  முறை  நீடித்திருந்தால்  லஞ்ச  கலாச்சாரத்தை  கட்டுப்பாட்டிற்குள்  வைத்திருக்கலாம்.

இப்பொழுது,  நம்  நாட்டில்  லஞ்சம்  கலாச்சாரம்  ஆழமாய்  வேரூன்றிவிட்டதை  மறுக்கமுடியுமா  என்ன?  பிரதமர்  துன்  டாக்டர்  மகாதீர்  முகம்மது  லஞ்ச  ஊழல்  கலாச்சாரமாக  விடக்கூடாது  என  எச்சரித்துள்ளார்.  உண்மைதான்.  லஞ்சம்  என்றால்  என்ன?  பலவிதமாக  வியாக்கியானம்  செய்யப்படலாம்.  ஆனால்,  உண்மையில்  அதுவும்  பயங்கரமான  வெளவுதல்  என்பதற்கு  மாற்றுக்கருத்து  கிடையாது.

லட்சக்கணக்கில்,  கோடிக்கணக்கில்  லஞ்சம்  பெற்று  வாழ்க்கை  நடத்துபவர்கள்  நிச்சயமாக  நிம்மதியான  வாழ்க்கையைக்  கொண்டிருக்கமுடியாது.  இந்திரபோக  வாழ்க்கை  குறுகிய  ஆயுளைக்  கொண்டது.  அது  பட்டுவிடும்.  லஞ்சம்  என்பது  பெருச்சாளியின்  தராதரத்தைக்  கொண்டது.  அது  புகுந்த  வீடு  செழிக்காது  என்பார்கள்.         லஞ்ச  கலாச்சாரம்  பெருகிவிட்ட  நாட்டில் அநீதிக்குப்  பஞ்சம்  இருக்காது.  நேர்மையற்றவர்களின்  ஆதிக்கம்  பலமடைந்து  நாட்டின்  சுபிட்சத்தைக்  கெடுத்துவிடும்.  அநீதி  தலைவிரித்தாடும்.

ஊழல்  மிகுந்த  நாடுகளில்  மலேசியா  அறுபத்திரண்டாம்  தரத்தில் இருக்கிறது.  இதன்  அர்த்தம்  என்ன?  லஞ்சம்,  இந்த  நாட்டில்  அதிகரித்துவிட்டது  என்பதற்கானச்  சான்று.  மகாதீர்  முன்னைய  பிரதமர்  காலத்தின்  போது  ஐந்நூறு  ரிங்கிட்,  ஆயிரம்  ரிங்கிட்  காகித  நணயங்கள்  செல்லுபடி  ஆகா  என  அறிவிக்கப்பட்டது.  பெரிய  தொகை  காகித  நாணயம்  எனும்போது  லஞ்ச  கலாச்சாரம்  பலமடைய  உதவியாக  இருந்தது.  சிறு,  சிறு  விலைமதிப்புள்ள   நாணயம்  ஒருவேளை  லஞ்ச  கலாச்சாரத்தைக்  கட்டுப்படுத்தலாம்.  அதே  சமயத்தில்,  லஞ்சத்தினால்  ஏற்படும்  கொடுமைகளைப்  பற்றி  பள்ளி  மாணவர்களுக்கு  கற்பிக்கப்பட்டால்  எதிர்காலத்தில்  அவர்கள்  இந்த  லஞ்ச  கலாச்சாரத்தை  வெறுத்து  ஒதுக்கும்  வாய்ப்பு  உண்டு.