அம்னோ மூழ்கிக் கொண்டிருப்பதால் அதனுடன் இணைவது நடக்கக்கூடியதல்ல என்கிறார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்.
“அம்னோ இப்போது மூழ்கிக் கொண்டிருக்கிறது. கடலுக்குப் போகும்போது மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு கப்பலுக்கு அருகில் சென்றால் நாமும் சேர்ந்து மூழ்கி விடுவோம்.
“ஓட்டை விழுந்த கட்சியுடன் இணைவது தொல்லை மிக்கது”, என்றவர் கூறியதாக இன்றைய ஹராக்காவில் செய்தி வெளிவந்துள்ளது.
ஹாடி, ஞாயிற்றுக்கிழமை டப்ளினில் ஒரு கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது அவ்வாறு கூறினாராம்.
பாஸ் தலைவர் அம்னோவை மூழ்கும் கப்பலுக்கு ஒப்பிட்டாலும் , ஒரு கட்சியின் சித்தாந்தங்கள் அப்படியே மறைந்து விட மாட்டா என்பதையும் வலியுறுத்தினார்.
“அம்னோ புதைக்குழிக்குள் கிடப்பதாகக் கூறுகிறார்கள், அது அவ்வளவு எளிதல்ல.
“தடை செய்யப்பட்ட கம்முனிஸ்டுக் கட்சிக்குக்கூட தொண்டர்கள் இன்னும் உள்ளனர். ஆடோல்ப் ஹிட்லர் (நாஜி) கட்சிக்கும் தொண்டர்கள் இருக்கிறார்கள். சைத்தானைப் பின்பற்றுவோரும் இருக்கவே செய்கிறார்கள்.
“நான் அம்னோவைச் சைத்தான் என்று சொல்லவில்லை. ஒரு சித்தாந்தத்தை அழிப்பது எளிதல்ல என்பதைத்தான் சொல்ல வந்தேன்”, என்றாரவர்.