மலேசியா.. மலேசியர்களுக்காக, சித்தி காசிம்

அன்பு செலுத்தவும் உதவி நல்குவதற்குமான பருவம் இது. ஆனால், இதற்கு மாறாக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? வெறுப்பைக் காட்டுவதற்கான பருவத்தைப் போல ஒரு சில தரப்பினர் செயல்படுகின்றனர். இதற்காக ஒரு பலியாட்டை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தவர்களைப் போல.. இப்படிப்பட்ட சந்தர்ப்ப்பத்தை உருவாக்கி,தங்களின் வஞ்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இப்படிப்பட்டவர்கள், அதிகாரத்தை அடைவதற்கான ஓர் இயக்கமாக  இயங்குகின்றனர். தங்களின் அரசியல் அபிலாஷையை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஓர் இளைஞனின் துயரமான மறைவைக்கூட அப்பட்டமாகப் பயன்படுத்திக் கொள்வதில் இவர்களுக்கு சிறிதும் வெட்கமில்லை.

இதில் ஏமாற்றத்திற்குரியது என்னவென்றால், மாற்றத்திற்குரிய மக்கள் பிரதிநிதிகளாகக் கருதி இப்படிப்பட்டவர்களை நாமெல்லாம் தேர்ந்தெடுத்ததுதான்.

கடந்த மாத பிற்பகுதியில் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கலவரத்தின் விளைவாக தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம்  மறைவெய்தியதற்காக தேசிய ஒற்றுமைத் துறைக்கான நடப்பு அமைச்சர் பொன்.வேதமூர்த்தியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி  பிரிபூமி கட்சியின் இளைஞர் பிரிவு ஒரு கோரிக்கை மனுவை  கடந்த டிசம்பர் 18-ஆம் நாள் பிரதமரிடம் அளித்துள்ளது. பளிச்சென பேசுபவரும் குறுக்கு சிந்தனை உள்ளவரும் முப்பது வயதைக்கூட எட்டாதவருமான இளைஞர்-விளையாட்டுத் துறை அமைச்சர்தான் பிரிபூமி இளைஞர் பிரிவை வழிநடத்துகிறார். இது ஒரு பெருத்த ஏமாற்றம்.

இரத்த வேட்கை கொண்டு ஒற்றுமை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியை பலிகடாவாக்க முயலும் இவர்கள், அருள்மிகு மாரியம்மன் ஆலத்தில் கலவரத்தைத் தொடக்கி வைத்த மலாய் அடியாட்கள் மேற்கொண்ட தடித்தனத்தைப் பற்றி மட்டும் வசதியாக மறந்து விட்டனர்.

ஆபத்தான கட்டத்தில் முகமட் அடிப்பிற்கு உதவ முன்வந்த ஆலய உறுப்பினர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் ஒருவரும் இல்லை.

என்ன நடந்தாலும் சரி, எப்போதும் பலிஆடாக ஆக வேண்டியது அடுத்தவர்தான்; சிறுபான்மையினருக்கு என்ன தீங்கு நிகழ்ந்தாலும் அதைப்பற்றி செவிமடுக்க மாட்டீர்கள். மரணம் நேரும் அளவுக்கு முகமட் அடிப்பைத் தாக்கியவர்கள் யார் என்பதைப் பற்றி இதுவரை ஒருவரும் பேசியதில்லை; உண்மையில், அடிப்-பிற்கு மரணம் நேரும் அளவுக்குத் தாக்கியவர்களைப் பற்றி இனிமேல்தான் நாமெல்லாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால், முகமட் அடிப்பிற்கு ஏற்பட்ட காயத்திற்கான காரணம் குறித்து இனிமேல்தான் நாமெல்லாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். ஊடகத் துறையும் முகமட் அடிப்மீதான மரணக் காயம் குறித்துப் பேசாமல் மறைத்து வருகிறது.

ஆலயத்தில் முதல் முதலில் ஆயுதமேந்தி நுழைந்த அடியாட்களால் பக்தர்கள் பேரளவில் காயம்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று; இது குறித்து தானகவே சாட்சி சொல்ல வந்தவர்களை கைது செய்யாமல் அவர்களின் சாட்சியத்தை போலீஸ் திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டதா? அன்று இரவில் ஆலயத்தில் நடைபெற்ற அத்துமீறல்களைப் பற்றி எந்த அளவுக்கு ஊடகம் பிரதிபலித்தது?  அல்லது உள்துறை அமைச்சர்தான் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தாரா? ஆலய வளாகத்திற்குள் பக்தர்களுக்கு ஏன் இரத்தம் சிந்த வைக்கப்பட்டது? இந்தத் துன்ப-துயரங்கள் ஏன் மறைக்கப்பட்டன? இந்தியர்களின் உயிர் மலாயரின் உயிரைவிட மலிவானதா?

மலாய் அடிப்படைவாதிகளின் சீற்றம் பெரிதுபடுத்தப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களோ அல்லது அரசாங்கத் தலைவர்களோ இதில் தலையிட்டு அமைதியை நிலைநாட்டவோ அல்லது உண்மை நிலையை எடுத்துரைக்கவோ முன்வரவில்லை? மாறாக, சம்பந்தப்பட்டவர்களின் மிரட்டும் தொனியும் கூக்குரலும் பெரும்பான்மை இனத்தில் எதிரொலிக்கும் அளவிற்கு மிஞ்சியுள்ளது.

இந்த நிலை, நம்பிக்கைக் கூட்டணி அரசின் அப்பட்டமான தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. பெர்சத்து கட்சியின் இளைஞர் அணித் தலைவரை விஞ்சியவர் ஒருவரும் இல்லை என்ற நிலை எழுந்துள்ளது.

மொத்தத்தில், நம்பிக்கைக் கூட்டணி மலாய்த் தலைமைத்துவம் தோல்வி அடைந்துள்ளதை இந்த சம்பங்கள் விவரிக்கின்றன. அத்துடன், உண்மை நிலை மற்றும் ஒற்றுமைத் தன்மையின் களங்கரை விளக்கமாக இருப்பதற்கு மாறாக, மலாய் சமுதாயத்தின் பரந்த தலைமைத்துவ இயலாமையைத்தான் இவை உணர்த்துகின்றன.

தலைமைத்துவ பலவீனத்தை சீர்செய்வதற்குப் பதிலாக மற்றவர்களைக் குறை சொல்வதிலும் பழியுரைப்பதிலும் பயனில்லை; ஒரு நல்ல சமூகம் என்பது, நல்லவர்களாலும் நல்ல தன்மையாலுமே அடையாளம் காணப்படுகிறது.

இந்த வேளையில், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்ப்பது அமைதியையும் நியாயமான முன்னெடுப்பையும்தான். எந்த நேரமும் ஒரு பலி ஆட்டை எதிர்பார்த்திருக்க வேண்டாம்;

ஆலய வளாகத்திற்குள் ஏவப்பட்ட குண்டர்தனத்திற்கும்  அராஜகத்திற்கும் எந்த அமைச்சரும் பொறுப்பேற்க முடியாது; அதைப்போல அங்கு காயம்பட்டு இரத்தம் சிந்தியவர்களுக்கும் தீரம் மிகுந்த தீயணைப்பு வீரர் உயிர் துறக்க நேர்ந்ததற்கும் எந்த அமைச்சருக்கும் தொடர்பில்லை.

1969 கருப்பு நாட்களுக்குப் பின் நீண்ட காலமாக நாமெல்லாம் மிகவும் அமைதியாக வாழ்ந்து வருகிறோம். தற்பொழுது, ஆட்சி அதிகாரத்தை இழந்தவர்கள் நீதியின் தண்டனையில் இருந்த தப்பிக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரேவழி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் என்பதை நன்கு அறிந்துள்ளனர். இத்தனைக்கும் சமுதாயத்தை சிதைத்தவர்கள் அவர்கள், அப்படி இருந்தும் அதிகார வெறியுடன் எப்படியாவது இந்த ஆட்சியின் பெரும்பான்மையில் சறுக்கலை ஏற்படுத்தலாமா என்று காத்திருக்கும் அவர்கள் சமூகத்தில் உணர்ச்சிமயமான சிந்தனைக்கு உரமிட்டு வருகின்றனர்.

அரசாங்கத் தலைவர்கள், குறிப்பாக மலாய் இனத் தலைவர்கள் தங்களை ஒருபடி மேலே உயர்த்திக் கொள்வதுடன் தங்களின் சிந்தனையையும்  செயலையும்  முன்னோக்கி செலுத்த வேண்டும். மலாய் சமுதாயத்தில் தெளிந்த சிந்தனையும் முற்போக்கு எண்ணமும் கொண்டவர்கள் நிறைய உள்ளனர். அமைதியாக இருக்கும் அவர்கள், தற்பொழுது நடைபெறும் சம்பவங்களை வெறுப்புடனும் அருவறுப்புடனும் கவனித்து வருகின்றனர். வீதியில் முழக்கமிடும் அடிப்படைவாதிகளைவிட பக்குவமும் பரந்தநோக்கும் கண்ணியமும் நிறைந்த மலாயர்தான் அதிகம். இருந்தாலும், பிரிவினைப் போக்கு கொண்டவர் அகலக் கால் வைக்க அனுமதிக்கக்கூடாது. இனியும் அனுமதித்தால், இப்படிப்பட்டவர்கள் சமுதாயத்தில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

சமுதாயம் என்னும் ஆலமரத்தை அழிக்கும் ஒட்டுண்ணிகளாகவும் சாறுண்ணிகளாகவும் இருக்கும் இவர்களைத் தொடர்ந்து அனுமதிக்கக்கூடாது. எனவே, தலைவர்கள் தலைவர்களாக இருக்க வேண்டும்; கோழையராக அல்ல;

நாம் காலமெல்லாம் துரயரத்தை சுமக்க முடியாது. எனவே, அனைவருக்கும் நீதி கிட்டும் வகையில் உரிய நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொண்டாக வேண்டும்.

தவிர, இது நம்மை புதுப்பித்துக் கொள்வதற்கும் அன்பைப் பரிமாறிக் கொள்வதற்குமான நேரம். அதைவிட, மலேசியர்களாகிய நாம் அனைவரும் ஒருவருக்காக ஒருவர் செயல்பட வேண்டிய தருணமும்கூட;

மலாயர், சீனர், இந்தியர், கடசானியர், ஈபானியர், சீக்கியர், பூர்வ குடியினர், பிடாயோக்கள், கென்யாக்கள், கயானியர், பாஜாவ் மக்கள், மூரூட் இனத்தவர், கெலாபிட் மக்கள், மெலனாவ் மக்கள் என யாராயினும் மலேசியர் என்னும் அடிப்படையில் இன்னும் வலுவாக ஒன்றுபடுவோம். நம் வருங்கால சந்ததியினருக்காக வலிமையான தேசத்தை உருவாக்குவோம்.

சீற்றமும் வெறுப்பும் கொண்ட குரல்களை நிறுத்துவோம்; அன்பு, ஒற்றுமைக்கான குரலை உயர்த்துவோம்!!

என்றும் எப்பொழுதும் மலேசியா, மலேசியர்களுக்காக!!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்!!!

– நக்கீரன்