வேதமூர்த்தியைப் பதவியிலிருந்து விலக்குங்கள், அரசாங்கத்திற்கு 40 நாள் அவகாசம்

கெராக்கான் ரக்யாட் மலேசியா இயக்கம் (கெராஸ்), தங்களது ஏழு கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு 40 நாள்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது.

இன்று, செனி கிள்ளான் சதுக்கத்தில் கூடிய அவர்கள், தீயணைப்பு வீரர் முகமது ஆடிப் முகமது காசிம் இறப்பிற்கு நீதி கேட்டும் பொ வேதமூர்த்தியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கடந்த 25 மற்றும் 26 நவம்பர், சீபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் கலவரத்திற்குப் பங்களிப்பாளராக இருந்தார் எனக் காரணம் கூறி, பொ வேதமூர்த்தியை ஒற்றுமை துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று தங்களின் கோரிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 2,000 பேர் முன்னிலையில் பேசிய, கெராஸ் இயக்கத்தின் தலைவர், அபு பாக்கார் முகமட், இந்தக் கோரிக்கை மனுவைப் பேரரசர், சுல்தான் முகமட் V -இடமும் வழங்கவுள்ளதாகக் கூறினார்.

“வேதமூர்த்தி பதவி விலக வேண்டும். அமைச்சராக இருக்க அவருக்குத் தகுதி இருக்கிறதா?”

“எனவே, தேசிய ஒற்றுமைக்காகவும் முகமட் ஆடிப் இறப்பிற்கு நீதி கேட்டும் அரசாங்கத்திற்கு நாங்கள் 40 நாள்கள் அவகாசம் கொடுக்கிறோம், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்,” என்றார் அவர்.

வேதமூர்த்தியைத் தவிர்த்து, கோயில் பிரச்சனையைத் ‘தூண்டிவிட்டனர்’ எனக் கூறி, மனித வள அமைச்சர் எம் குலசேகரன் மற்றும் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வி கணபதி ராவ் இருவரையும் கூட பதவியிலிருந்து விலக்க கெராஸ் வலியுறுத்தியுள்ளது.