கேமரன் மலை இடைத்தேர்தலில் மனோகரன் போட்டியிட வேண்டும், பஹாங் டிஏபி விருப்பம்

எதிர்வரும் ஜனவரி 26-ல் நடைபெறவிருக்கும் கேமரன் மலை இடைத்தேர்தலில், வழக்குரைஞர் எம் மனோகரன் போட்டியிட வேண்டும் என பஹாங் டிஏபி பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2013 தொடக்கம், கேமரன் மலை தொகுதியில் சேவையாற்றி வருவதால், அங்குப் போட்டியிட மனோகரன்தான் தகுதியான வேட்பாளர் என்று பஹாங் டிஏபி தலைவர், லியோங் ங்கா ங்கா தெரிவித்தார்.

“2 முறை தோற்றுப்போனாலும், அவர் அங்குத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்,” என்று லியோங் கூறியதாக ஃப்.எம்.தி. செய்தி வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 8-ம் தேதி, அத்தொகுதியில் டிஏபி வேட்பாளர்தான் நிறுத்தப்படுவார் எனப் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதிர் கூறியிருந்தார்.

14-வது பொதுத் தேர்தலில், மஇகா-வின் சி சிவராஜ், 567 ஓட்டுகள் வித்தியாசத்தில் அத்தொகுதியை வென்றார். ஆனால், அத்தேர்தல் முடிவை எதிர்த்து, நீதிமன்றத்தில் மனோகரன் தொடுத்த வழக்கில், சிவராஜ் தோல்வியுற்றதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

சிவராஜ் தேர்தல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை, மாறாக, இடைத்தேர்தலில் பிஎன் போட்டியிடும் எனத் தெரிவித்தார்.

கடந்தப் பொதுத் தேர்தலில், 6 முனைப் போட்டியைக் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி சந்தித்தது. அதில் சிவராஜ் 10,307 வாக்குகள் பெற்றவேளை, அவரை எதிர்த்து போட்டியிட்ட மனோகரன் 9,710, பாஸ் கட்சியைச் சேர்ந்த வான் மாஹாடிர் வான் மஹ்மூட் 3,587, பி.எஸ்.எம். பி சுரேஸ் 680 மற்றும் பெர்ஜாசா முகமட் தாஹிர் காசிம் 81 வாக்குகளும் பெற்றனர்.