பிகேஆர் துணைத் தலைவர் முகம்மது அஸ்மின் அலி, நேற்றிரவு அறிவிக்கப்பட்ட கட்சியின் பிரதான தலைமை பதவி நியமனங்களை மீண்டும் மதிப்பீடு செய்ய, கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம்-ஐ வலியுறுத்தியுள்ளார்.
கட்சி உறுப்பினர்களின் விருப்பமான, ‘நியாயமான மற்றும் சமமான பிரதிநிதித்துவம்’ என்ற கொள்கையை, அந்த நியமனங்கள் பிரதிபலிக்கவில்லை என அவர் கூறினார்.
“கட்சித் தேர்தல்களைத் தொடர்ந்த அந்த நியமனங்கள், கட்சியின் போராட்டத்தை உண்மையான பாதையில் மீட்டெடுக்கும் வகையில், கருத்தாய்வு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
“ஆனால், அறிவிக்கப்பட்ட நியமனங்கள், உறுப்பினர்களின் ‘நியாயமான மற்றும் சமமான’ பிரதிநிதித்துவத்தின் கொள்கையைப் பிரதிபலிக்கவில்லை, இது கட்சியை முன்னோக்கி நகர்த்த உதவாது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நேற்று, பிகேஆர் மத்திய நிர்வாகக் குழுவின் (எம்பிபி) கூட்டத்திற்குப் பிறகு, அன்வார் கட்சி நியமனங்களை அறிவித்தார்.
அதில், கட்சி தேர்தலில் தோல்வியடைந்த ரஃபிசி ரம்லி, உதவித் தலைவராகவும் சைஃபுதின் நாசூத்தியோன் இஸ்மாயில் மீண்டும் தலைமைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.