‘நான் அனைவரையும் அரவணைத்துச் செல்ல விரும்புகிறேன்’ – அஸ்மினுக்கு அன்வார் பதில்

பிகேஆர் பதவி நியமனங்கள் குறித்த அஸ்மின் அலியின் அறிக்கைக்குப் பதிலளித்த அன்வார் இப்ராஹிம், கட்சியில் தான் அனைவரையும் அரவணைத்துச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்.

“நான் அனைவரையும் அரவணைக்க விரும்புகிறேன், அவருக்கு (அஸ்மின்) ஒருசிலர் வேண்டாம்.

“தலைமைப் பொறுப்புகளில் எனக்கு அனைவரும் சேர்ந்திருக்க வேண்டும்…. அதுதான் வித்தியாசம்,” என்று அவர் கூறியுள்ளார்.

“அவருக்கு ஒருசிலரைப் பிடிக்காது என்று எனக்குத் தெரியும், ஆனால், நான் அவர் தரப்பில் இருந்தும் சிலரை நியமித்துள்ளேன்.

“அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டியது அவசியம், இதனை நீங்கள் மறுக்க முடியாது,” என்று அவர் தெரிவித்ததாக தி ஸ்டார் செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையே, கட்சியின் முன்னாள் தலைவர் டாக்டர் வான் அஸிஸா, கட்சி பதவிகளில் சிலரை நியமிக்க தலைவர் என்ற வகையில் அன்வாருக்கு உரிமை உண்டு எனக் கூறியுள்ளார், குறிப்பாக உதவித் தலைவர் பதவிக்கு ரஃபிசி ரம்லியின் நியமனம்.

கட்சியின் அரசியலமைப்பு 21.7-ஆம் பிரிவு, தலைவர் மூன்று உதவித் தலைவர்கள் மற்றும் ஏழு செயலவையினரை நியமிக்க வேண்டும் என்று கூறுகிறது.

அன்வார் தலைமையில், நேற்று நடந்த கூட்டத்தில் அந்த நியமனங்கள் செய்யப்பட்டன, ஆனால் அஸ்மின் தரப்பு உறுப்பினர்கள் பலர் விடுமுறையில் சென்றுவிட்டதால், கூட்டத்தில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.