மஇகா தன் உதவித் தலைவர் சி.சிவராஜ் அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் தகுதி இழப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதற்கு எதிராக நீதிமுறை மேல்முறையீடு செய்யவுள்ளது.
ஊழல் நடவடிக்கைகள்தான் 14வது பொதுத் தேர்தலில் சிவராஜ் கேமரன் மலையில் வெற்றிபெற வழிவகுத்தன என்ற தேர்தல் நீதிமன்றத்தின் தீர்ப்பை இசி “சொந்தமாக அர்த்தப்படுத்தி”க் கொண்டிருக்கிறது என்று மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கூறினார்.
“நீதிபதி அவரது தீர்ப்பில் 1954, தேர்தல் குற்றச் சட்டம், பிரிவு 37-இன்கீழ் ஊழல் புரிந்தவர்கள் என்று சிவராஜின் பெயரையோ அல்லது வேறு யாருடைய பெயரையோ குறிப்பிடவில்லை.
“எனவே, இசி நீதித்துறையின் அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு சொந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின்றி இசி எப்படி இப்படி (சிவராஜ் போட்டியிடும் தகுதி இழப்பதாக) முடிவு செய்யலாம்?
“சட்டத்தைப் பின்பற்றுகிறார்களா, அல்லது இவர்களே சட்டத்தை வகுக்குக்கிறார்களா என்பது புரியவில்லை”, என்றவர் அடுத்த வாரத் தொடக்கத்தில் மேல்முறையீட்டுக்கு மனு தாக்கல் செய்யப்படும் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.