பெர்சத்து உதவித் தலைவர் பேச்சு சரியா? அமைச்சரவை விவாதிக்கும்

ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அரசாங்க வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் தப்பில்லை என்று தேர்தல் ஆணைய முன்னாள் தலைவர் ரஷிட் அப்துல் ரஹ்மான் பேசியது சரியா என்று அமைச்சரவை அதன் வாராந்திரக் கூட்டத்தில் விவாதிக்கும்.

இதை இரண்டு அமைச்சர்கள் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினர்.

இப்போது பெர்சத்துவின் ஒரு உதவித் தலைவராக உள்ள அப்துல் ரஷிட், அரசாங்க வளங்களைப் பயன்படுத்தி கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற பேராளர்களின் கோரிக்கையைப் புறந்தள்ளுவது “மடத்தனம்” என்று கூறியிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை, புத்ரா ஜெயாவில் பெர்சத்து ஆண்டுக் கூட்டத்தில் பேசியபோது அவர் அவ்வாறு கூறினார்.

“அவர் (ரஷிட்) மிகவும் மோசம்”, என்று அமைச்சர்களில் ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“14வது பொதுத் தேர்தலுக்குமுன் தொகுதிகளைத் திருத்தி அமைப்பது பற்றியும் தேர்தல் சீரமைப்புப் பற்றியும் இரண்டு தடவை அவரோடு விவாதித்தேன்.

“அவரிடம் சரக்கில்லை. அவர் சொன்னது எதுவுமே திருப்திகரமாக இல்லை”, என்றாரவர்.

ரஷிட் அரசாங்கத்தின் தேர்தல் சீரமைப்புக் குழுவின் தலைவராகவும் உள்ளார். அது குறித்தும் அமைச்சரவையும் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மன்றமும் விவாதிக்கும்.