கடந்த பொதுத் தேர்தலில் கேமரன் மலையில் போட்டியிட்ட எம்.மனோகரனே எதிர்வரும் இடைத்தேர்தலிலும் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளராக அத்தொகுதியில் களமிறக்கப்பட வேண்டும் என்று பெர்சத்து சுங்கை கோயான் கிளை பரிந்துரைத்துள்ளது.
மனோகரனுக்கு ஆதரவு தெரிவித்து அக்கிளை டிசம்பர் 28ஆம் தேதி எழுதிய கடிதமொன்றை மலேசியாகினி கண்டது.
சுங்கை கோயான் , கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளடங்கிய ஜெலாய் சட்டமன்றத் தொகுதியில் உள்ளது. ஜெலாய் பகாங் மந்திரி புசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் வசமுள்ளது.
டிஏபியும் ஹரப்பானும் தங்கள் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும் அத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு மனோகரனுக்கே அதிகம் உள்ளதாக தெரிகிறது.
மனோகரன்தான் அத்தொகுதியில் பிஎன் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்றார். அதன் விளைவாக தேர்தல் ஆணையம் மே 9 தேர்தலில் மஇகாவின் சி.சிவராஜ் பெற்ற வெற்றி செல்லாது என்றும் அவர் அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அறிவித்தது.