சொஸ்மா, பொகா சட்டங்களை வைத்துக்கொள்வது அநியாயம்: சுவாராம் சாடல்

உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் 2012 பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கை) சட்டம் (சொஸ்மா), 1959 குற்றச்செயல் தடுப்புச் சட்டம்(பொகா) ஆகியவை சில திருத்தங்களுடன் தொடர்ந்து வைத்துக்கொள்ளப்படும் என்று கூறியதை மனித உரிமை ஆணையம் சுவாராம் கண்டித்துள்ளது.

பக்கத்தான் ஹரப்பான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாமல் பின்வாங்குவதாகதாகவும் பிஎன் அரசாங்கம் எந்தக் காரணங்களைக் கூறி அச்சட்டங்கள் வைத்திருப்பதை நியாயப்படுத்திக் கொண்டிருந்ததோ அதே காரணங்களையே ஹரப்பானும் கூறுவதாகவும் அது குறிப்பிட்டது.

அவ்விரு சட்டங்களையும் அகற்றாதவரை பிஎன்னும் பக்கத்தானும் ஒன்றுதான்.

“சொஸ்மாவையும் பொகாவையும் இரத்துச் செய்யுங்கள். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களை நீதிமன்றங்களில் தற்காத்துக்கொள்ள நியாயமான வாய்ப்பைக் கொடுங்கள்.

“இல்லையா, பிஎன் வேறு தான் வேறு அல்ல என்பதை பக்கத்தான் ஒப்புக்கொள்ள வேண்டும்”, என சுவாராம் செயல் இயக்குனர் சேவன் துரைசாமி ஓர் அறிக்கையில் கூறினார்.

முகைதின் யாசின் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெர்சத்து பேரவையில் உரையாற்றியபோது அவ்விரு சட்டங்களும் சிற்சில திருத்தங்களுடன் வைத்துக்கொள்ளப்படும் என்று    கூறியதாக   அறிவிக்கப்பட்டிருந்தது.